நாகப்பட்டினம்,டிச.1: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை வேளாங்கண்ணி, நாகூர், திட்டச்சேரி, வேதாரண்யம், கீழ்வேளூர் என எல்லா இடங்களிலும் பரவலாக கனமழையாக பெய்து வருகிறது. தொடர் கன மழையால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று (30ம் தேதி) மூன்றாம் நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடல் செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்தாலும் கனமழையாக பெய்வதால் வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கமுடியாமல் விவசாயிகள் திணறிவருகின்றனர். மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் குடியிருப்புகள் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வேளாங்கண்ணி பூக்கார தெரு சுனாமி குடியிருப்பு பகுதியில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு முழுவதும் நீடித்து நேற்று மதியம் வரை பெய்தகாரணத்தால் சுனாமி குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்தது.
மழைநீருடன் கழிவு நீரும் சேர்வதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வேளாங்கண்ணி பேரூராட்சி சார்பில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டாலும் தொடர்ந்து கன மழை பெய்வதால் மழை நீர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்து வெளியேறாமல் நீடித்து வருகிறது.
The post இயற்கை இடர்பாடுகளில் இருந்து மக்களை பாதுகாக்க நாகப்பட்டினத்தில் பெய்த கனமழையால் வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பில் மழைநீர் சூழ்ந்தது appeared first on Dinakaran.
