நஜ்மல் அதிரடி சதத்தால் நியூசியை முந்திய வங்கம்

சிலெட்: வங்கதேசம்-நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வங்கத்தின் சிலெட் நகரில் நடக்கிறது. முதலில் விளையாடிய வங்கம் முதல் இன்னிங்சில் 85.1ஓவரில் 310ரன் குவித்திருந்தது. அதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசி கேன் வில்லியம்சன் 104 கிளென் பிலிப்ஸ் 62, டாரியல் மிட்செல் 41 ரன் எடுக்க 2வது நாள் ஆட்ட நேர முடிவில்ல் 84ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில் 44 ரன் பின்தங்கிய நிலையில் 3வது நாளான நேற்று களத்தில் இருந்த கேல் ஜேமிசன் 7, கேப்டன் டிம் சவுத்தீ 1 ரன்னுடன் முதல் இன்னிங்சை தொடர்ந்தனர்.

இருவரும் பொறுப்புடன் விளையாடி 9வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தனர். ஜேமிசன் 23 ரன்னிலும், சவுத்தீ 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனால் நியூசி முதல் இன்னிங்சில் 101.5 ஓவரில் 317 ரன் குவித்தது. அஜாஸ் படேல் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார். வங்கம் தரப்பில் தய்ஜூல் இஸ்லாம் 4, மொமினுல் 3 விக்கெட் சுருட்டினர். அதனையடுத்து 7ரன் பின்தங்கிய நிலையில் வங்கம் தனது 2வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் மஹமதுல் 8, ஜாகீர் ஹசன் 17ரன்னில் வெளியேறினர். பொறுப்பாக விளையாடிய மொமினுல்லும் 40ரன்னில் ரன் அவுட் ஆக்கப்பட்டார்.

அதனையடுத்து இணை சேர்ந்த கேப்டன் நஜ்மல் ஷான்டோ, முஷ்பிகுர் ரகீம் இணை நியூசியின் பொறுமையை சோதிக்கும் வகையில் பொறுப்புடன் விளையாடியது. அந்த இணை 4வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 96ரன் சேர்த்தது. சதம் விளாசிய நஜ்மல் 104ரன்னுடனும், முஷ்பிகுர் 40 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். அதனால் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேசம் 68 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 212ரன் சேர்த்தது. அதன் மூலம் வங்கம் 205 ரன் முன்னிலைப் பெற்றது. அஜாஸ் படேல் மட்டும் நேற்று ஒரு விக்கெட் வீழத்தினார். இந்நிலையில் கைவசம் 7 விக்கெட்கள் இருக்க, 205ரன் முன்னிலையுடன் வங்கம், 4வது நாளான இன்று 2வது இன்னிங்சை தொடர உள்ளது.

The post நஜ்மல் அதிரடி சதத்தால் நியூசியை முந்திய வங்கம் appeared first on Dinakaran.

Related Stories: