மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ₹9.5 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள்

செங்கல்பட்டு, நவ.30: செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 88 கோரிக்கை மனுக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது. மேலும், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 3 பயனாளிகளுக்கு தலா ₹1 லட்சத்து, 6 ஆயிரம் வீதம் ₹3 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளையும் மற்றும் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட 6 பயனாளிகளுக்கு தலா ₹1 லட்சத்து, 5 ஆயிரம் வீதம் ₹6 லட்சத்து,30 ஆயிரம் மதிப்புள்ள பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நியோமோஷன் வீல் சேர் என மொத்தம் ₹9 லட்சத்து,48 ஆயிரம் மதிப்புள்ள உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து அறிவொளி கலைக்குழு மூலம் விழிப்புணர்வு தெருமுனைப் பிரசாரம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான மூன்று சக்கர வாகன பேரணியை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும், அனைத்து அரசு அலுவலர்களுக்கும் கணக்கெடுப்பு தரவுகள் பற்றிய விழிப்புணர்வு செய்தி தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குனர் மணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ₹9.5 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் appeared first on Dinakaran.

Related Stories: