அதிரவைத்த 5 மாநில தேர்தல் யாருக்கு சாதகம் பாதகம்? .. பதற்றத்துடன் காத்திருக்கும் கட்சிகள்

நவ.7ல் மிசோரம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளில் தொடங்கிய 5 மாநில தேர்தல் திருவிழா நாளை நடைபெற உள்ள தெலங்கானா மாநில தேர்தலுடன் முடிவுக்கு வருகிறது. தேர்தல் நடக்கும் இந்த 5 மாநிலங்களில் ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி, மத்தியபிரதேசத்தில் காங்கிரசிடம் இருந்து பறித்து ஆட்சி நடத்தும் பா.ஜ, மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணியின் ஆட்சி, தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலங்களில் டிச.3ம் தேதி ஓட்டு எண்ணிக்கை. அப்போது 5 மாநில தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது தெரிந்து விடும். ஆனால் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து ஒன்றியத்தில் ஆளும் பா.ஜவும்., இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியான காங்கிரசும் பதற்றத்தில் காத்திருக்கின்றன. இந்த தேர்தல் முடிவுகள் தான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் என்ன நடக்கும் என்பதையும், ஒவ்வொரு கட்சிகளின் பலத்தை அறியவும் உள்ள களம் என்பதால் தான், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே சூடு பறந்தது.

குறிப்பாக மபி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் தேர்தல் தான் பா.ஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டியை ஏற்படுத்திய களமாக மாறி விட்டது. காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிவித்த பிறகு தான் களம் இறங்கியது. ஆனால் பா.ஜ தேர்தலுக்கு முன்பே மபி, சட்டீஸ்கரில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிரடி காட்டியது. இதை எல்லாம் விட பிரதமர் மோடி கடந்த 4 மாதங்களாக தேர்தல் நடந்த இந்த 5 மாநிலங்களில் நலத்திட்ட உதவிகள் தொடங்கி வைப்பதாக கூறி சுற்றி சுற்றி வந்தார். இறுதியாக நவ.30ல் தேர்தல் நடக்கும் தெலங்கானாவில் கூட அவர் கால் பாதம் படாத இடமே இல்லை என்று கூறும் அளவுக்கு பா.ஜவின் பிரசார முகமாகவே அவர் காணப்பட்டார். தொடர்ச்சியான பிரசாரம், தொய்வில்லாத பொதுக்கூட்டங்கள், காங்கிரசை விமர்சிக்கும் ஆக்ரோஷ பேச்சுக்கள் என்று அவர் இந்த 5 மாநில தேர்தலில் பா.ஜவை தன்தலையில் சுமந்து வழிநடத்தினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் ஒன்றிய அமைச்சர்களும் மோடியின் பிரசாரத்திற்கு ஆதரவாக களம் இறக்கப்பட்டனர். உபி முதல்வர் யோகியையும் அனைத்து மாநிலங்களுக்கும் முதல்முறையாக பா.ஜ தலைமை அனுப்பி வைத்தது கவனிக்கத்தகுந்த ஒன்றாக அமைந்தது.

காங்கிரஸ் முகாமில் அனைத்து மாநிலங்களிலும் முதல்முறையாக பிரசாரத்தை தொடங்கி வைத்தது பிரியங்கா காந்தி தான். அதன்பின்னர் தான் ராகுல், கார்கே உள்ளிட்டோர் களத்தில் குதித்தனர். சமீபத்தில் உபி உள்பட 6 மாநிலங்களில் காலியாக இருந்த 7 தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி 4 இடங்களை கைப்பற்றியது. குறிப்பாக பா.ஜவின் பலம் பொருந்திய உபி மாநிலம் கோஷி தொகுதியை இந்தியா கூட்டணி கைப்பற்றியது ஆச்சர்யங்களை ஏற்படுத்தியது. அதனால் மபி, சட்டீஸ்கர், தெலங்கானாவில் தங்களுக்கும் காங்கிரஸ் கட்சி சீட் ஒதுக்கீடு செய்யும் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் காத்திருந்தன. ஆனால் தெலங்கானாவில் மட்டும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு சீட் மட்டும் கொடுத்து விட்டு, தேர்தல் வெற்றிக்குப்பிறகு 2 எம்எல்சி சீட் தருவதாக கூறி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை காங்கிரஸ் முடித்து விட்டது.

மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தானில் சீட் ஒதுக்காததால் ஆம்ஆத்மி, சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாக களம் கண்டன. குறிப்பாக அகிலேஷ்யாதவ் வெளிப்படையாகவே காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தார். மக்களவை தேர்தலில் உபியில் 80 தொகுதியிலும் களம் இறங்க தயாராக இருக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சியினருக்கு அவர் அழைப்பு விடுத்தார். இதனால் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு உபியில் ஒரு சீட் கூட சமாஜ்வாடி ஒதுக்காதா என்ற கேள்வியும் எழுந்தது. இன்னொரு புறம் 4 மாதமாக இந்தியா கூட்டணியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று அதை உருவாக்க பாடுபட்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும் கடும் அதிருப்தி. இந்த நேரத்தில் தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டு, வேட்பாளர் தேர்வை நடத்தி பிரசாரத்தை தொடங்கி இருக்க வேண்டாமா என்பது அவரது ஆதங்கம்.

ஆனால் காங்கிரசின் கணக்கு வேறு. பா.ஜ எதிர்ப்பு அலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பிரசார யுக்திகளை வகுத்து 5 மாநில தேர்தலில் அபார வெற்றி பெற்றுவிட்டால் இந்தியா கூட்டணியில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வலுவாக பேரம் பேச வசதியாக இருக்கும் என்பது அவர்கள் எண்ணம். இதுதவிர ராஜஸ்தான், சட்டீஸ்கர், மபியில் முன் எப்போதும் இல்லாத வகையில் காங்கிரஸ் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசியதும் ஒரு காரணம். தெலங்கானா மாநிலமும் கடைசி கட்டத்தில் காங்கிரஸ் பக்கம் திரும்பலாம் என்ற கருத்து கணிப்புகள் தேர்தலுக்கு முன்பே வெளியானது காங்கிரசுக்கு இன்னும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதனால் இந்தியா கூட்டணி பற்றிய பேச்சையே 5 மாநில தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கையில் எடுக்கவில்லை. டிச.3ம் தேதி தேர்தல் ரிசல்ட் வெளியான பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பது காங்கிரஸ் முடிவு. இந்த முடிவினால் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருக்கும் கட்சிகளுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தத்தான் பிரதமர் மோடி தெலங்கானா பிரசாரத்தில் தேர்தல் நடந்து முடிந்த மாநிலங்களில் இந்தியா கூட்டணி முற்றிலும் துடைத்து எறியப்படும் என்ற கருத்தை தெரிவித்தார்.

எந்தவித செல்வாக்கும் இல்லாத தெலங்கானா தேர்தலை கூட பா.ஜ சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. களம் தங்களுக்கு எந்தவிதத்திலும் சாதகமாக இல்லை என்பது நன்றாக தெரிந்தாலும் தெலங்கானாவில் அத்தனை இடங்களிலும் பா.ஜ வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அத்தனை பா.ஜ தலைவர்களும் பிரசாரத்திற்கு குவிக்கப்பட்டனர். காரணம் 5 மாநில தேர்தலில் வரும் முடிவுகள் நிச்சயம் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும். ஒட்டுமொத்த தேசமும் இந்த முடிவுகளின் பின்னால் அணிவகுத்து நிற்கும் என்பது பா.ஜவுக்கு தெரியும். அதனால் தான் இந்த அளவுக்கு 5 மாநில தேர்தல்கள் இந்த முறை கடும் பலப்பரிட்சையை உருவாக்கி விட்டது. டிச.3ல் தேர்தல் முடிவுகள் வரும் போது மக்களவை தேர்தலுக்கான அடுத்த வியூகத்திற்கான வழிகள் பிறந்து விடும்.

கண்ணை உறுத்தும் 83 மக்களவை தொகுதிகள்
2024ல் நடக்க உள்ள மக்களவை தேர்தலில் தென் மாநிலங்களில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் தெலங்கானா தவிர்த்து தமிழ்நாட்டில் 39, கேரளாவில் 20, ஆந்திராவில் 25, கர்நாடகாவில் 28, புதுச்சேரியில் 1 தொகுதி உள்பட 113 மக்களவை தொகுதிகளில் குறைந்தது 100 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வசம் சென்றுவிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் இந்த 5 மாநிலங்களில் மட்டும் 83 தொகுதிகள் உள்ளன. இங்கும் பா.ஜவின் பலம் பரிசோதிக்கப்படும் போது பெரிய சிக்கல் ஏற்படும். ஏனெனில் 2014 மற்றும் 2019ல் பா.ஜவுக்கு பெரிய அளவில் மபி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்கள் ஆதரவாக திரும்பி உள்ளன. அதனால் 2024 தேர்தல் களம் பா.ஜவுக்கு மிகப்பெரிய சோதனைக்களமாகவே மாறி உள்ளது.

The post அதிரவைத்த 5 மாநில தேர்தல் யாருக்கு சாதகம் பாதகம்? .. பதற்றத்துடன் காத்திருக்கும் கட்சிகள் appeared first on Dinakaran.

Related Stories: