நலமளிக்கும் நம்பிக்கை

கிறிஸ்துவம் காட்டும் பாதை

உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று’’ (மாற்கு 5:34)

குணம் பெற்ற மனிதர்களைப் பார்த்து ஆண்டவர் இயேசு பலமுறை உனது நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று என்று கூறியதாகவே நற்செய்தி நூல்கள் தெரிவிக்கின்றன. இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மருத்துவர்கள் புதுமையாளர்கள், மந்திரவாதிகள் போன்ற மனிதர்களிடமிருந்து இயேசுவை முற்றிலுமாக வேறுபடுத்தியது இந்த நம்பிக்கையூட்டும் வார்த்தைதான் என்பது கவனிக்கத்தக்கது. தாமே நோயாளிகளுக்குக் குணமளித்ததாக இயேசு கூறவில்லை. மந்திரவாத, மாயவித்தைகளினால் குணம் கிடைக்கவில்லை. கடவுள் குணமாக்குகிறார் என்றுகூட அவர் வெளிப்படையாகக் கூறவில்லை.

இயேசு கூறியது ‘‘உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று’’ என்றுதான். இயேசு வாழ்ந்த காலத்தில் ஏழைகள் பாவிகள் நோயுற்றவர்கள் போன்றோர் தங்கள் நிலை ஒரு போதும் மாற போவதில்லை என்று அவநம்பிக்கையோடு சோர்ந்த நிலையில்தான் வாழ்ந்தார்கள். இந்த அவநம்பிக்கையையும் விதிவசக் கொள்கையையும் முறியடிக்கும் விதத்தில் இயேசுவின் குணமளிக்கும் செயல் அமைந்தது. தங்களை பிடித்த நோயிலிருந்து ஒரு போதுமே மீளப் போவதில்லை என்று நம்பிக்கையிழந்து சோர்ந்திருந்த நோயுற்றோருக்கு இயேசு நம்பிக்கையூட்டினார்.

தங்கள் நோயிலிருந்து தாங்கள் விடுதலை பெற இயலும் என்று நம்பும்படி அவர்களுக்கு உந்துதல் தந்தார். இயேசுவின் நம்பிக்கையும் அவர் கொண்டிருந்த அசைக்கமுடியாத உறுதியோடும் நோய்யுற்றோர் உள்ளத்திலும் நம்பிக்கை பிறக்கத் தூண்டுதலாயிற்று. இயேசுவோடு பழகியவர்கள் அவருடன் எவ்விததிலாவது தொடர்புக் கொண்டவர்கள். அவரிடத்திலிருந்து ஆழ்ந்த நம்பிக்கையாலும், உறுதியாலும் வெகுவாகக் கவரப்பட்டார்கள்.

எனவே மக்கள் இயேசுவிடம் தங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தக் கேட்டார்கள் (லூக் 18:5). தங்கள் அவநம்பிக்கையை அகற்ற வேண்டினார்கள் (மாற் 9:24) மக்களின் உள்ளத்தில் நம்பிக்கைக் கனலைத் தூண்டினார் இயேசு. அதன்பிறகு அந்த நம்பிக்கை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவியது. ஒருவரின் நம்பிக்கையைத் தூண்டி எழுப்ப முடிந்தது. இயேசு தம் சீடர்களை அனுப்பியதே இந்த நம்பிக்கையை மக்களின் உள்ளங்களிலும் தூண்டி எழுப்புவதற்காகத்தான். எங்கெல்லாம் விதிவாச கொள்கை மறந்து நம்பிக்கை சூழல் உருவாகியதோ, அங்கெல்லாம் மக்கள் குணமடைந்தார்கள்.

தீய ஆவிகளின் பிடியிலிருந்து விடுப்பட்டனர். தொழுநோயாளிகள் நலம் பெற்றனர். விடுதலையளிக்கும் புதுமைகள் நிகழத் தொடங்கின. நம்பிக்கையும், பற்றுறுதியும் உடைய மனிதர் கடவுளைப் போன்று வல்லமையுடைவராக மாறுகிறார் என்பது இயேசுவின் கருத்து.

எனவேதான், நம்பு கிறவருக்கு எல்லாம் நிகழும் என்று இயேசு கூறினார் (மாற்கு 9:23) நம்பிக்கையிருந்தால் எல்லாம் முடியும் என்பதை உணர்த்திய ஆண்டவர் இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை கொள்வோம். இயேசு பயணித்த அந்த நம்பிக்கையின் பாதையில் நாமும் தொடர்ந்து பயணிப்போம்.

பேராயர் தே. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் – மதுரை

The post நலமளிக்கும் நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: