எந்தப் பதவியில் இருப்பவர்கள் சொன்னாலும் நீட் விலக்கு என்கிற இலக்கு மக்கள் ஆதரவுடன் நிறைவேறும்: டாக்டர்கள் சங்க மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடந்த, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 4வது மாநாடு, 20ம் ஆண்டு தொடக்க விழா, மற்றும் டிஎன்எம்எஸ்ஏ- டிஎன்டிஎஸ்ஏ கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்து மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திமுக உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடியபோது, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்களான நீங்கள் அனைவரும் ஆதரவாக நின்றீர்கள்.

அந்தச் சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்றோம். அதனால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் வாழுகிற இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மருத்துவப் படிப்பை உறுதி செய்தோம். தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட, வளர்த்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவக் கட்டமைப்போடு, இந்தியாவின் வேறெந்த மாநிலத்தையும் ஒப்பிடவே முடியாது. ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்க அளவில்தான் நம்முடைய மருத்துவக் கட்டமைப்புகள் வளர்ந்திருக்குறது என்பதை இந்து ஆங்கில நாளேட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறையில், உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையிலான திராவிட மாடல் அரசின் நடைமுறைகளை, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் பின்பற்றினால், சமூக முன்னேற்றத்தை எளிதாக்கலாம் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு, “தகுதி மற்றும் சமூகத் தாக்கங்கள் பற்றிய பரந்த புரிதல் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது“ என்றும் எழுதப்பட்டுள்ளது. அறிவியலுக்குப் புறம்பான மருத்துவ முறைகள், பொதுமக்களைச் சோதனை எலிகளாக மாற்றிடும் அபாயம் கொண்டவை. இந்தியா சோதனை எலியாக மாறிடுமோ என்ற அச்சம் சமூக சமத்துவ மருத்துவர்கள் சங்கத்தைச் சார்ந்த உங்களிடம் இருப்பதை உணருகிறேன்.

ஏன் என்றால், மக்களின் உயிர் காத்து, அவர்களின் ஆயுளை நீட்டிக்கும் நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்கிற வகையில் மிக்ஸோபதி, ஒருங்கிணைந்த மருத்துவம், Common Foundation Course, வேதகால மருத்துவம், ஆன்மீக மருத்துவம், சோதிட மருத்துவம் என்று போலி அறிவியலைத் திணிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டு இருப்பதால் அதை எதிர்த்துப் போராட வேண்டிய கடமையுணர்வோடும் இந்த மாநாடு நடந்துகொண்டு இருக்கிறது. மருத்துவர்களான உங்களின் அறிவுப்பூர்வமான – உணர்வுப்பூர்வமான போராட்டத்தில் நாங்கள் துணை நிற்கிறோம்.

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் மருத்துவக் கட்டமைப்புகளை சிதைக்கும் வகையில், முதலில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்ற ஆணவத்தோடு யார் பேசினாலும், எந்தப் பதவியில் இருப்பவர்கள் சொன்னாலும், நீட் விலக்கு என்கிற நம் இலக்கு, மக்களின் பேராதரவுடன் நிறைவேறியே தீரும். அதற்காக தி.மு.கழகத்தின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி இணைந்து உங்களைப் போன்றவர்களின் ஆதரவோடு தொடங்கிய கையெழுத்து இயக்கம், இன்றைக்கு மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது.

நாம் நீட்டை எதிர்க்கும் நேரத்தில், நெக்ஸ்ட் தேர்வு என்று அடுத்த ஆபத்து நுழைகிறது. அதையும் வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். மருத்துவத் துறையையும் நாட்டையும் மீட்டு ஆரோக்கியமாக்குவதற்கு அதிகபட்சமாக இன்னும் 6 மாதம் தேவையாக இருக்கிறது. வெற்றிகரமான சிகிச்சையை நிச்சயமாக இந்திய மக்கள் அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

* நாம் நீட்டை எதிர்க்கும் நேரத்தில், நெக்ஸ்ட் தேர்வு என்று அடுத்த ஆபத்து நுழைகிறது. அதையும் வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம். மருத்துவத் துறையையும் நாட்டையும் மீட்டு ஆரோக்கியமாக்குவதற்கு அதிகபட்சமாக இன்னும் 6 மாதம் தேவையாக இருக்கிறது. வெற்றிகரமான சிகிச்சையை நிச்சயமாக இந்திய மக்கள் அளிப்பார்கள்.

The post எந்தப் பதவியில் இருப்பவர்கள் சொன்னாலும் நீட் விலக்கு என்கிற இலக்கு மக்கள் ஆதரவுடன் நிறைவேறும்: டாக்டர்கள் சங்க மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: