திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்ணை மலையாக்கும் விநோத திருவிழா: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

மேலூர்: மேலூர் அருகே திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்ணை மலையாக்கும் விநோத திருவிழா இன்று நடந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே நரசிங்கம்பட்டியில் உள்ளது பெருமாள்மலை. இங்குள்ள முன்னமலை ஆண்டிச்சாமி கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீப திருநாள் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அப்போது கோயிலை ஒட்டி உள்ள சேங்கை எனப்படும் ஓடையில் இருந்து கைப்பிடி மண்ணை எடுத்து அருகில் போட்டு இறைவனை வழிபாடு செய்வர். இத்துடன் மிளகு, உப்பு ஆகியவையும் அந்த மண்ணில் போடப்படும்.

இப்படி மண்ணை எடுத்து போட்டால் விவசாயம் செழிப்பதுடன், நோய் நொடியின்றி வாழலாம் என்பது நம்பிக்கை. பக்தர்களால் கைப்பிடி மண்ணாக வீசிப்பட்ட இந்த இடத்தில் தற்போது ஒரு மணற்குன்றே உருவாகி உள்ளது.
திருக்கார்த்திகையையொட்டி இன்று நரசிங்கம்பட்டி, தெற்கு தெரு, வெள்ளரிப்பட்டி, சிட்டம்பட்டி, மேலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஓடையில் கைப்பிடி மண்ணை அள்ளி போட்டு வேண்டினர். இன்றிரவு இங்குள்ள பெருமாள் மலை மீது தீபம் ஏற்றப்படுகிறது.

இதேபோல் மேலவளவு சோமகிரி மலை அடிவாரத்தில் உள்ள கருப்பு கோயிலில் சாதி, மத வித்தியாசமின்றி அதிகாலை முதல் இரவு வரை சிறப்பு வழிபாடு நடைபெறும். பொதுமக்கள் தங்கள் நேர்த்திகடனாக அரிவாள்களை காணிக்கையாக செலுத்துவர். இரவில் இம்மலை உச்சியில் பிரமாண்ட தீபம் ஏற்றப்பட்ட பிறகே இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவர். ஆட்டுக்குளம் பெருமாள்மலையில் பக்தர்களின் வழிபாடு காலையில் இருந்து துவங்கி நடைபெற்று வருகிறது. இரவு இம்மலையில் உள்ள பெரிய அகல்விளக்கில் தீபம் ஏற்றப்படும்.

The post திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்ணை மலையாக்கும் விநோத திருவிழா: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: