கத்திரி வெயிலை கூல்டவுன் செய்தது கோடை மழையால் குளிர்ந்தது தேனி

*நீர்நிலைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 மாத காலமாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்ததால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததோடு வெப்பத்தின் தாக்கம் இரவிலும் எதிரொலித்தது. இந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில், இன்று 6-வது நாளாக பெரியகுளத்தை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் பெரியகுளத்தை சுற்றியுள்ள லட்சுமிபுரம், கள்ளிப்பட்டி, கைலாசப்பட்டி, வைகை அணை, ஜெயமங்கலம், வடபுதுப்பட்டி, மதுராபுரி, தேவதானப்பட்டி கெங்குவார்பட்டி, மஞ்சளார் அணை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பிற்பகல் 2 மணி முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய துவங்கியது.

அதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து 6 நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் கோடையில் இரண்டாம் போகம் நெல் நடவு செய்த விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கடந்த சில நாட்களுக்கு முன் கடமலை மயிலை ஒன்றியத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் பொதுமக்களை வாட்டி எடுத்தது இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட பகுதியில் இடியுடன் கனத்த மழை பெய்து வருகிறது. மேலும் கடமலை மயிலை ஒன்றியத்தில் பெரும்பாலான கிராமங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.

அதன் காரணமாக அந்தந்த பகுதிகளில் உள்ள மூல வைகை ஆறுகள் மற்றும் ஓடைகள் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நீண்ட இடைவெளிக்கு பின்பு ஓடை சாலைகளில் நீர்வரத்து ஏற்பட்டதை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து அதிகளவில் மழை பெய்து மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகளவில் இன்னும் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆரஞ்சு அலர்ட் மக்களே…

கேரளா மாநிலத்தில் சூறாவளி சுழற்சியின் தாக்கம் காரணமாக இன்று முதல் மே 17ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூறாவளி சுழற்சி அடுத்த 4 நாட்களுக்கு இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழையுடன் காற்றும் வீசும் என்று என்று அறிவுறுத்தபட்டுள்ளது. மே 16,17 தேதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த கற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மே 16ம் தேதி இடுக்கி மாவட்டத்திற்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் இடி, மின்னலுடன் 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை காற்று வீசும். இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட ஆட்சியரும் அறிவுறுத்தியுள்ளார்.

ரயில்வே பாலத்தில் தேங்கிய மழைநீர்

ஆண்டிப்பட்டியில் இருந்து தெப்பம்பட்டி, வேலப்பர் கோவில் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் வழியாக ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் ஆண்டிப்பட்டி பகுதியில் நேற்று பெய்த மழையின் காரணமாக ரயில்வே பாலங்களில் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. ஆண்டிப்பட்டி-தெப்பம்பட்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே பாலத்தின் வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். குறிப்பாக பைக்குகளில் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகமான தண்ணீர் தேங்கியுள்ளதால் இந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அதிகமான மக்கள் சென்று வரும் இந்த சாலையில் ரயில்வே பாலத்தில் தேங்கும் தண்ணீரை அப்புறபடுத்துவதோடு, இனிவரும் நாட்களில் மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடி, சின்னமனூரில் பரவலாக மழை

சின்னமனூரில் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் பொதுமக்கள் வெளியில் தலை காட்ட முடியாமல் தவித்து வந்தனர். விவசாயத்திற்கு பாசன பற்றாக்குறையும் நீடித்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. பொதுமக்கள் நனைந்து கொண்டு சாலையில் கடந்தனர். வாகனங்க ளும் ஆங்காங்கே ஒன்று கொன்று ஊர்ந்து சென்றனர். தற்போது வெப்பம் தணிந்து குளிர்ச்சி பிறந்திருப்பதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இதே போல் போடி சுற்று வட்டாரப்பகுதிகளில் மாலை நேரங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக போடி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் யாவும் குளிர் சூழல் நிலவுகிறது.

The post கத்திரி வெயிலை கூல்டவுன் செய்தது கோடை மழையால் குளிர்ந்தது தேனி appeared first on Dinakaran.

Related Stories: