பள்ளிகளுக்கு விடுமுறையை முன்னிட்டு தஞ்சாவூர் பெரியகோயிலில் குவிந்த மக்கள்

*அருங்காட்சியகம், ராஜாளி கிளிபூங்காவிலும் கூட்டம் அலைமோதியது

தஞ்சாவூர் :பள்ளிகளுக்கு விடுமுறையை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயில் அருங்காட்சியகம், ராஜாளி கிளி பூங்கா கொண்டிட சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக் காட்டாக விளங்கும் இந்த கோயிலை தினமும் உள்நாடு மற்றும் வெளி நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தஞ்சாவூர் பெரியகோயிலில் குவிந்தனர். இவர்கள் கார்கள், வேன்கள், பஸ்களில் வந்ததால் பெரியகோவில் முன்புள்ள வாகன நிறுத்துமிடம் நிரம்பியது. கோயிலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள், பக்தர்கள் பெரிய கோயிலை சுற்றி பார்த்து கட்டிடக் கலையையையும், சிற்பக்கலையையும் பார்த்து மெய்சிலிர்த்தனர்.

நுழைவு கோபுரம், ராஜராஜன்கோபுரம், மூலவர் கோபுரம், பெரிய நந்தி ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். மேலும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.பின்னர் சாமி தரிசனம் செய்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் முதியவர்கள் நடப்பதற்கு ஏதுவாக விரிப்புகள் போடப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட்டது. அதில் பொதுமக்கள் நடந்து சென்றனர்.

தஞ்சாவூர் பெரியகோவில் அருகே ராஜாளி பறவைகள் பூங்கா உள்ளது. இங்கு 20 நாடுகளை சேர்ந்த 300க்கும் அதிகமான அரிய வகை பறவைகள், நெருப்பு கோழி, வாத்துக்கள், முயல்கள், முள் எலி, நாய் வகைகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ராஜாளி பூங்காவிற்கு குடும்பத்துடன் சென்று நேரத்தை கழித்தனர்.

அங்கு பறவைகளுக்கான உணவை நம் கைகளில் வைத்திருந்தால் அந்த பறவைகள் நம் கைகள் மீது உட்கார்ந்து தன் அலகுகளால் உணவை கொத்தி தின்றதை பார்த்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் முயல்களுக்கு கேரட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை கொடுத்து மகிழ்ந்தனர்.

சிறுவர்கள் முயல்களுடன் விளையாடி உற்சாகம் அடைந்தனர். மேலும் பூங்காவின் அருகே உள்ள அருங்காட்சியகத்தில் வேளாண் துறை சார்பில் பழமையான வேளாண் கருவிகள், தஞ்சை தலையாட்டி பொம்மை உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை காவிரி ஆறும், அதன்கிளை ஆறுகளின் செயல்பாடுகள் குறித்த தத்ரூபமான காட்சிகளை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து நவதானியங்கள், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட பெரிய கோவில் மாதிரி, மாவட்டங்களில் கண் டெடுக்கப்பட்ட பழங்கால உலோக சிற்பங்கள், கற்சிற்பங்கள், சரஸ்வதி மஹால் நூலக காட்சியகம், 7 டி திரையரங்கம் உள்ளிட்டவைகளையும் பார்த்து மகிழ்ந்தனர்.

தஞ்சாவூர் அரண்மனை, கலைக்கூடம், சரசுவதிமகால் நூலகத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கலைக்கூடத்தில் இருந்த கற்சிற்பங்கள், உலோக சிற்பங்களை சுற்றுலா பயணி, கள் பார்த்து மகிழ்ந்தனர். சரசுவதிமகால் நூலகத்திற்கு சென்ற சுற்றுலா பயணி கள் அங்குள்ள அரியவகை ஓலைச்சுவ டிகள், தமிழில் சங்ககால இலக்கிய உரைகள், மருத்துவ குறிப்புகளையும் பார்த்து மகிழ்ந்தனர்.

தஞ்சாவூர் மாநகரில் சிவகங்கை பூங்கா, ராஜராஜன் மணிமண்டபம் ஆகியவை மக்களின் பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்தன. ஆனால் தற்போது சிவகங்கை பூங்காவிலும், மணிமண்டபத்திலும் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் அருகே நீர்வளத்துறை சார்பில் ரூ.8 கோடியே 84 லட்சம் மதிப்பில் சமுத்திரம் ஏரியை சீர் செய்து அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவில் நேற்று மக்கள் தங்களது குழந்தைகளுடன் குவிந்தனர். அங்குள்ள புல்வெளியிலும், இருக்கைகளிலும் பெரியவர்கள் அமர்ந்து சிறுவர்கள் விளையாடுவதை பார்த்து மகிழ்ந்தனர். ஊஞ்சல், சறுக்குகளில் சிறுவர்கள் உற்சாகமாக விளையாடினர்.

அதேபோல் தஞ்சை அருளானந்த நகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.11 கோடியே 50 லட்சம் செலவில் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பூங்காவிலும் (ஸ்டெம் பூங்கா) மக்கள் தங்கள் குழந்தைகளுடன் குவிந்தனர். அங்குள்ள அறிவிய தொழில்நுட்பங்களை பார்த்து மகிழ்ந்தனர். தஞ்சை பழைய பஸ் நிலைய அருகே உள்ள ராஜப்பா பூங்காவிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

The post பள்ளிகளுக்கு விடுமுறையை முன்னிட்டு தஞ்சாவூர் பெரியகோயிலில் குவிந்த மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: