வேலூர் மாநகராட்சி சர்கார் தோப்பில் ₹68 கோடியில் 50 எம்எல்டி அளவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிகள் தீவிரம்

*ராட்சத தொட்டிகளில் நீர் கசிவு சோதனை

வேலூர் : வேலூர் மாநகராட்சி சர்கார் தோப்பில் ரூ.68 கோடியில்50 எம்எல்டி அளவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ராட்சத தொட்டிகளில் நீர் கசிவு சோதனை நடந்து வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாநகராட்சியில் முதல்கட்டமாக பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2015ம் ஆண்டு ரூ.40.49 கோடியில் தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ரூ.343 கோடியில் சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரம், கொணவட்டம், சேண்பாக்கம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 3வது கட்ட பாதாள சாக்கடை திட்டம் ரூ.243 கோடியில் காட்பாடி, கழிஞ்சூர், காந்தி நகர், காங்கேயநல்லூர் பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே 4வது கட்டமாக பாதாள சாக்கடை பணிகளும் தொடர்ந்து வேகமெடுத்துள்ளது. இதில், பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பதற்காக வேலூர் சர்க்கார் தோப்பில் ரூ.68 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நவீன சுத்திகரிப்பு நிலையம் மொத்தம் 50 எம்எல்டி கொள்ளளவு கொண்டதாக அமைகிறது.

இதில் மாநகராட்சி முழுவதிலும் இருந்து ராட்சத பைப்புகள் மூலம் கொண்டுவரப்படும் கழிவுநீர், சுத்திகரிக்கப்பட்டு, அதில் இருந்து கல், மண், சாக்லேட் கவர்கள் என்று தனித்தனியாக தரம் பிரித்து இறுதியில் கழிவுநீர் சுத்திகரித்து நல்ல நீராக வெளியேற்றப்படும். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் பாதாள சாக்கடை இணைப்பு வீடுகளுக்கு வழங்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் அனைத்து பணிகளும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வேலூர் மாநகராட்சி சர்கார் தோப்பில் ₹68 கோடியில் 50 எம்எல்டி அளவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: