லாரி மீது கார் மோதல்; சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி பலி: 2 பேர் படுகாயம்

சூளகிரி: சூளகிரி அருகே இன்று காலை லாரி மீது கார் மோதிய விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 3பேர் பலியாகினர். மேலும் 2பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்த தமிழன்பன்(21), மேட்டூரைச் சேர்ந்த தஸ்வின் (22), திருச்சியைச் சேர்ந்த சந்தோஷ் (22), சர்வின் ஐசக்(22), திருப்பூரைச் சேர்ந்த நரேன் யஸ்வந்த்(22) ஆகியோர் படித்து வருகின்றனர். இவர்கள் 5 பேரும் இன்று அதிகாலை பெங்களூருவில் இருந்து காரில் திருப்பூரில் நடக்கும் நிகழ்ச்சிக்காக புறப்பட்டு வந்தனர். அதிகாலை 5.30மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோனேரிப்பள்ளியில் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்தனர்.

அப்போது முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி, எந்தவித சிக்னலும் கொடுக்காமல் இடதுபுறமாக திரும்பியது. இதனால் பின்னல் வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியதில் இடிபாடுகளில் சிக்கி சந்தோஷ், தமிழன்பன், நரேன் யஸ்வந்த் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஜசக், தஸ்வின் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்த 2பேரை சிகிச்சைக்காகவும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை போலீசார் சரிசெய்தனர். தொடர்ந்து விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post லாரி மீது கார் மோதல்; சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி பலி: 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: