போலியோ நோயால் பாதித்த பேரனை கிணற்றில் தள்ளி கொன்று மூதாட்டி தற்கொலை

சத்தியமங்கலம்: போலியோ நோயால் பாதித்த பேரனை கிணற்றில் தள்ளி கொன்று மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு பு.புளியம்பட்டி நகராட்சி நாவலர் வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (50). மில் தொழிலாளியான இவரின் முதல் மனைவி வசந்தா மணி இறந்து விட்ட நிலையில், போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மகன் நவீன்குமார் (30) இரண்டாவது மனைவி மற்றும் பொன்னுச்சாமியின் தாய் சுப்பம்மாள் (82) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். போலியோவால் பாதித்து நடக்க முடியாமல் இருந்த நவீன்குமாரை பாட்டி சுப்பம்மாள் பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பொன்னுசாமி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்ட நிலையில் நேற்று காலை இரண்டாவது மனைவி மற்றும் அவரது மகள் மேட்டுப்பாளையம் தனியார் கண் மருத்துவமனைக்கு சென்று விட்டனர்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பொன்னுச்சாமி தாய் சுப்பம்மாள் மற்றும் மகன் நவீன்குமார் இருவரையும் காணாததால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் தேடி உள்ளார். பின்னர், வீட்டின் முன்புறம் உள்ள 15 அடி ஆழமுள்ள நிலத்தடி தொட்டி மூடி திறந்திருந்ததால் சந்தேகம் அடைந்து தொட்டிக்குள் பார்த்த போது சுப்பம்மாள், நவீன் குமார் இருவரும் தொட்டியில் சடலமாக மிதந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது போலியோ நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் பேரன் நவீன் குமார் சக்கர நாற்காலியில் நடமாடுவதை கண்டு மனவேதனையில் மூதாட்டி சுப்பம்மாள் இருந்ததாகவும், மன விரக்தியில் பேரனை தண்ணீர் தொட்டியில் தள்ளிவிட்டு விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது. இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போலியோ நோயால் பாதித்த பேரனை கிணற்றில் தள்ளி கொன்று மூதாட்டி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: