29 பேரை ஒரே நாளில் கடித்த தெருநாய்: சென்னையில் 17,813 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி; மாநகராட்சி அதிகாரி தகவல்

* சிறப்பு செய்தி
சென்னையில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டு துரத்தி துரத்தி கடிக்கப் பாய்வதும், இதனால் உயிருக்கு பயந்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதும், பலர் தடுமாறி விழுந்து காயமடைவதும் தொடர்கதையாக நீடிக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் தனியாக வாகனங்களில் செல்பவர்கள் நிலை அவ்வளவு தான், பேயைக் கண்டால் கூட அப்படி ஓடமாட்டார்கள். ஆனால், நாயை கண்டால் பயந்து ஓட்டமெடுக்கும் சம்பவம் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்லும் நபர்களுக்கும் நிச்சயம் நடைபெற்று இருக்கும். இந்த தெருநாய்கள் குப்பை தொட்டிகள், சாலையோரங்களில் கூட்டமாக சுற்றி திரிவதுடன், அடிக்கடி சண்டையிட்டு சாலையில் குறுக்கே ஓடுவதால் விபத்தும் ஏற்படுகிறது.

தெருநாய்கள் ஒருமுறை கருத்தரித்தால் குறைந்தது 5க்கும் மேற்பட்ட குட்டிகளையாவது ஈன்றெடுக்கும். இதை கட்டுப்படுத்த தவறினால் அது பல மடங்கு பெருகிவிடும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு பெருகி வரும் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, சாலையில் திரியும் நாய்களை பிடிக்க சென்னை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தினமும் ஆய்வு மேற்கொண்டு எந்த பகுதியில் தெரு நாய்கள் சுற்றி திரிகிறதோ, அவைகளை பிடித்து வாகனங்கள் மூலம் திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட பேசின் பாலம் மற்றும் கண்ணம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.அங்கு, கால்நடை உதவி மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு அவற்றை மீண்டும் அதே பகுதியில் விடப்படுகிறது. இவ்வாறு கடந்த 3 மாதங்களாக சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையால் தெருநாய்கள் தொல்லை குறைந்திருந்தது. ஆனால், வடசென்னையில் வர்த்தகம் அதிகம் உள்ள பகுதியான ராயபுரம் பகுதியில் ஜிஏ சாலையில் நேற்று முன்தினம் மாலை தெருநாய் ஒன்று ஒரு மணி நேரத்திற்குள் 29 பேரை கடித்தது.சென்னை ராயபுரம் பகுதியில் தெருநாய் ஒன்று மாலை வேளையில் ஒரே நேரத்தில் 29 பேரை கடித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியை சேர்ந்த மக்கள் அந்த நாயை அடித்து கொன்றுள்ளனர்.

இந்த சம்பத்தில் காயமடைந்த பலரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து இறந்த நாயின் உடலை மீட்ட சென்னை மாநகராட்சி பிரேத பரிசோதனைக்காக சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து வெறிநாய்கடி நோய் தடுப்பூசி போடும் பணியினை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டோம். பொதுமக்கள் 27 பேரை கடித்த, நாயின் பிணக்கூறாய்வு முடிவுகள் வெளியான பின்னரே நாய்க்கு தொற்று நோய் உள்ளதா என்பது குறித்து தெரியும், அதே பகுதியில் சுற்றித்திரிந்த 25 நாய்களை பிடித்து, புளியந்தோப்பு நாய்கள் இனக் கட்டுப்பாடு மையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு பின் வெறிநாய்கடி நோய் தடுப்பூசி போடப்பட்டு, பின்னர் பிடித்த இடத்திலேயே விடப்படும். சென்னை மாநகராட்சி முழுவதும் 16 நாய்பிடி வாகனங்கள் உள்ளன, ஒரு வாகனத்திற்கு ஐந்து பணியாளர்கள் உள்ளனர். சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து வெறிநாய்கடி நோய் தடுப்பூசி போடும் பணியினை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் 16 ஆயிரம் நாய்கள் பிடிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது. இந்தாண்டில் இதுவரை 17,813 நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில், 13,486 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

* தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து இனக்கட்டுப்பாடு செய்ய மண்டலத்துக்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
* தெருநாய்கள் ஒருமுறை கருத்தரித்தால் குறைந்தபட்சம் 5 குட்டிகளையாவது போடும்.
* கடந்த ஆண்டு 16,000 நாய்கள் பிடிக்கப்பட்டு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. இந்த ஆண்டு இம்மாதம் வரை 17,813 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
* ராயபுரம் பகுதியில் ஒரே நாளில் 27 பேரை கடித்துக்குதறிய நாயை பொதுமக்கள் அடித்து கொன்றனர்.

The post 29 பேரை ஒரே நாளில் கடித்த தெருநாய்: சென்னையில் 17,813 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி; மாநகராட்சி அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: