சாத்தான்குளத்தில் வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

சாத்தான்குளம், நவ. 23: சாத்தான்குளத்தில் வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. தமிழகத்தில் தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் பேரில் வாக்காளர் சேர்க்கை நடந்து வருகிறது. அதன்படி வரும் 25, 26ம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடக்கிறது. இச்சிறப்பு முகாம் தொடர்பாக சாத்தான்குளத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணிக்கு பள்ளி தலைமையாசிரியர் ஜெபசிங் மனுவேல் தலைமை வகித்தார். தாசில்தார் ரதிகலா, புதிய வாக்காளர்கள் சேர்ப்பது பற்றி எடுத்துரைத்து கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். வாக்காளர் சேர்க்கை தொடர்பாக வருவாய்த்துறையினர் எடுத்துரைத்தனர்.

பேரணியில் புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி, ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி ஊர்வலமாக வந்து பொதுமக்களுக்கு வாக்காளர்கள் சேர்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியானது முக்கிய வீதி வழியாக வந்து சாத்தான்குளம் பழைய பஸ்நிலையம் காமராஜர் சிலை அருகில் நிறைவுபெற்றது. இதில் வருவாய் ஆய்வாளர் பிரஸ்சியா, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கோமதிநாயகம், கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துராமலிங்கம், கந்தவள்ளிகுமார், பள்ளி ஆசிரியர்கள் டேனியல், வசந்த் ஜெபத்துரை, ஜோசப், மார்க்ராஜ், கவுசிக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post சாத்தான்குளத்தில் வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: