திசையன்விளையில் மூதாட்டியிடம் நூதனமுறையில் 2 பவுன் பறித்த இருவருக்கு வலை

திசையன்விளை, நவ.22: திசையன்விளையில் குடிநீர் வாங்கி பருகுவதுபோல் நடித்து மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறித்துச் சென்ற வாலிபர்கள் இருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம், திசையன்விளை செல்வமருதூர் பவுண்டு தெருவில் பெருமாள் பிள்ளை சந்து பகுதியைச் சேர்ந்தவர் முத்தாட்சி அம்மாள் (80). இவருக்கு குழந்தைகள் இல்லை. கணவரை இழந்த நிலையில் தனியாக வசித்து வந்த இவர், நேற்று முன்தினம் மதியம் சமையல் செய்துவிட்டு வீட்டின் முன்புற திண்ணையில் அமர்திருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த வாலிபர்கள் இருவர் தாகத்திற்கு குடிநீர் தருமாறு கேட்டுள்ளனர். இதை உண்மை என நம்பிய முத்தாட்சி அம்மாள் அதன்படி வீட்டின் உள்ளே சென்று குடிநீர் கொண்டுவந்து கொடுத்தார். அதை பருகிவிட்டு அங்கிருந்து புறப்பட்ட இருவரும் மூதாட்டி அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி பயத்துடன் நீண்ட நேரம் வீட்டிலேயே இருந்து விட்டார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் திசையன்விளை காவல் நிலையத்திற்கு சென்ற மூதாட்டி, நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்து நகை பறித்துச்சென்ற இரு வாலிபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post திசையன்விளையில் மூதாட்டியிடம் நூதனமுறையில் 2 பவுன் பறித்த இருவருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: