ஊரப்பாக்கம் ரேவதிபுரம் – கங்கை நகர் இடையே ரூ.1 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் சாலை பணி: திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் ஊராட்சி ரேவதிபுரம் – கங்கை நகர் இடையே ரூ.1 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை திமுக ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்தி நேரில் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட 13 மற்றும் 14வது வார்டு பகுதிகளை இணைக்கக்கூடிய ரேவதிபுரத்திலிருந்து கங்கை நகருக்கு செல்லும் சுமார் 1,500 மீட்டர் தூரம் கொண்ட பிரதான சாலை கடந்த 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாகவும், வெயில் காலங்களில் புழுதி நிறைந்த சாலையாகவும், மழை காலங்களில் சேறும், சகதியுமாகவும் காட்சி அளித்து வந்தது.

இதனால் ரேவதிபுரம், கங்கை நகர், குபேரன் நகர், கோதாவரி நகர், காவேரி நகர், அம்பிகா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மேற்படி சாலையில் செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து அப்பகுதி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி, திமுக ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, சிமென்ட் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியினை ஊரப்பாக்கம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

The post ஊரப்பாக்கம் ரேவதிபுரம் – கங்கை நகர் இடையே ரூ.1 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் சாலை பணி: திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: