பேட் செய்தபோது ரன் குவிக்க தவறினோம்; பவர்பிளேவில் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தால் வேறு விதமாக இருந்திருக்கும்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி


அகமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு கோப்பையுடன் ரூ.33 கோடி பரிசு வழங்கப்பட்டது. லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இந்தியா பைனலில் தோல்வி அடைந்தது ரசிகர்களை மட்டுமின்றி வீரர்களையும் ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது: ஆட்டத்தின் முடிவு நமக்கு சாதகமாக இல்லை. இந்த நாள் சிறப்பானதாக அமையவில்லை. நாங்கள் முடிந்தவரை முயற்சித்தோம். கூடுதலாக 20 – 30 ரன் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கோஹ்லியும், ராகுலும் சிறப்பான கூட்டணி அமைத்தனர். நாங்கள் 270 முதல் 280 ரன் வரை எதிர்பார்த்தோம்.

ஆனால், தொடர்ந்து விக்கெட் இழந்த காரணத்தால் அது முடியாமல் போனது. 240 ரன் டிஃபென்ட் செய்யும் போது சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்த்த வேண்டும். நாங்கள் அதை செய்ய விரும்பினோம். இருந்தும் ஹெட் – லபுஷேன் இடையில் அமைந்த கூட்டணி அந்த வாய்ப்பை பறித்தது. இரவு நேரத்தில் மின் ஒளிக்கு கீழ் விளையாடும் போது ஆடுகளம் பேட் செய்ய சிறப்பானதாக இருந்தது என்பதை உணர்ந்தேன். அதை காரணமாக சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. பேட் செய்தபோது ரன் குவிக்க தவறினோம். 3 விக்கெட் வீழ்த்தி பவுலர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். மேற்கொண்டு ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்திருந்தால் அதன் தாக்கம் வேறு விதமாக இருந்திருக்கும், என்றார். ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது: நாங்கள் பந்து வீசிய இன்னிங்ஸில் இந்திய ரசிகர்கள் பெரும்பாலான நேரங்களில் அமைதியாக இருந்த போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இந்திய அணிக்கு அவர்கள் கொடுக்கும் ஆதரவு அபாரமாக இருந்தது. இத்தொடர் முழுவதும் நாங்கள் பெரும்பாலும் முதலில் பேட்டிங் செய்தோம். எனவே இப்போட்டியில் சேசிங் செய்யலாம் என்று நினைத்தோம். நான் நினைத்ததை விட பிட்ச் சற்று மெதுவாக இருந்தது. 300 ரன்னுக்குள் இந்தியாவை கட்டுப்படுத்தியிருந்தால் கூட நாங்கள் வெல்ல முடியும் என்று நினைத்தோம். ஹெட் காயத்தை சந்தித்த நிலையில் ரிஸ்க் எடுத்து விளையாடியதற்கு பலன் கிடைத்துள்ளது, என்றார். ஆட்டநாயகன் டிராவிஸ் ஹெட் கூறியதாவது: இந்த உலகில் தற்சமயத்தில் ரோகித் சர்மா துரதிஷ்டமான நபராக இருப்பார் என்று நினைக்கிறேன்.

இருப்பினும் நான் அவர் கொடுத்த கேட்சை பிடிக்கும் அளவுக்கு ஃபீல்டிங்கில் பயிற்சிகளை எடுத்தேன். ஆடம் கில்கிறிஸ்ட், பாண்டிங் ஆகியோருடன் ஃபைனலில் சதமடித்த வீரர்கள் பட்டியலில் இணைவது நல்ல உணர்வை கொடுக்கிறது. நான் தொடர்ந்து அணியுடன் இருக்க விரும்புகிறேன்’’ என்றார்.

டிரஸ்சிங் ரூமில் வீரர்களை பார்க்க கடினமாக இருந்தது
தோல்விக்கு பின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அளித்த பேட்டி: தோல்வியில் டிரஸ்ஸிங் ரூமில் வீரர்கள் ஏமாற்ற அடைந்தனர். நிறைய உணர்ச்சிகள் இருந்தன. பயிற்சியாளராக அவர்களை பார்ப்பது கடினமாக இருந்தது. அவர்களுடன் அதிக நேரம் செலவிட்டதால், அவர்களை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அது கடினமாக இருந்தது. இதில் இருந்து மீண்டு நாங்கள் முன்னேறுவோம்.

இதுபோன்ற விளையாட்டுகள் உங்களை உயர்ந்த நிலையை அடைய வைக்கும், என்றார். உலக கோப்பையுடன் ஒப்பந்தம் முடிந்த நிலையில் பயிற்சியாளராக தொடர்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல் டிராவிட், நான் அதைப் பற்றி யோசிக்கவில்லை. அதைப் பற்றி சிந்திக்கவும் நேரமில்லை. எனக்கு நேரம் கிடைக்கும்போது முடிவு செய்வேன். உலகக் கோப்பையில் பற்றி மட்டுமே கவனம் செலுத்தினேன், என் மனதில் வேறு எதுவும் இல்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றி நான் வேறுஎதையும் சிந்திக்கவில்லை, என்றார்

டெண்டுல்கர் ஆறுதல்
போட்டி முடிந்த உடன் நடந்தபரிசளிப்பு நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் கண்ணீரை அடக்கிக் கொண்டு நின்றனர். அப்போது ஆட்ட நாயகன் விருது வழங்க வந்த சச்சின் டெண்டுல்கர், இந்திய வீரர்களை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். எந்த வீரரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தோல்வி கொடுத்த வலியில் வார்த்தை வராமல் நின்று கொண்டு இருந்தனர். சச்சின் அவர்களை தட்டிக் கொடுத்து, கட்டி அணைத்து தேற்றினார்.

ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் நீடிக்கும் இந்தியா
உலககோப்பை இறுதி போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தாலும் ஐசிசி ஒருநாள் போட்டிக்கான அணிகள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

The post பேட் செய்தபோது ரன் குவிக்க தவறினோம்; பவர்பிளேவில் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தால் வேறு விதமாக இருந்திருக்கும்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: