சிறுதானியத்திலும் செழிப்பு இல்ல… மானாவாரியும் மகசூல் இல்ல… தடம் மாறிய விவசாயத்தால் தத்தளிக்கும் விவசாயிகள்

* கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
* நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்க வேண்டுகோள்

திருச்சுழி, நவ. 19: சிறுதானியம், மானாவாரி பயிர்கள் என போதிய மகசூல் இல்லாததாலும், கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில், திருச்சுழி தாலுகாவில் 10,746 ஹெக்டேர் நஞ்சையும், 30,280 ஹெக்டேர் புஞ்சையும், அதேபோன்று அருப்புக்கோட்டை தாலுகாவில் 1,991 ஹெக்டேர் நஞ்சையும், 53, 756 புஞ்சையும் உள்ளது. இந்த விவசாய நிலங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் ஆரம்பகாலத்தில் பணப்பயிர் சாகுபடியான கரும்பு மற்றும் பருத்தி செய்து தங்களது வாழ்க்கையே நடத்தி வந்தனர். காலப்போக்கில் பருவகால மாற்றத்தால் மழையின்றி பல வருடங்களாக கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் காய்ந்த நிலையில் உள்ளன.

இதனால் 100க்கு சுமார் 40 சதவீதம் மட்டுமே விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். முன்பு காலத்தில் நிலங்களில் சிறுதானிய பயிர்களான நெல், கம்பு, சோளம்,உளுந்து, பயிர்வகைகள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு போதுமான விலை இல்லாத காரணத்தினாலும், மானாவாரி சாகுபடி மாவட்டத்தில் அதிகமாக உள்ளதால் விவசாயிகள் மக்கசோளம் போன்ற சாகுபடி செய்ய முன்வந்தனர். அதற்கு பிறகு இதில் இருக்கும் அமெரிக்கன் படைப்புழுதாக்குதல் போன்ற நோய்கள் பிரச்சனைகள் விவசாயிகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகினர். வருடா, வருடம் அதே பிரச்சனை இருக்குமென என்பதால் விவசாயிகள் மக்கசோளம் பயிரிடுவதை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என கருதி மக்கசோளத்தை பயிரிடுவதை தவிர்த்து வருகின்றனர்.

மேலும் காட்டுப்பன்றிகளின் இனப்பெருக்கம் அதிகரிப்பால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பன்றிகள் சிறுதானியபயிர்கள் பதம் பார்த்து வருகின்றன. முன்பெல்லாம் மழை பெய்யாமல் விவசாயம் நலிந்து போனால் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் ஆய்வு நடத்தபட்டு பயிர் காப்பீடு வழங்கப்பட்டு வந்தன. தற்போது பிர்கா அளவில் ஆய்வு நடத்தபடுவதால் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நஞ்சை நிலங்களுக்கு வரக்கூடிய நீர்ப்பிடிப்புகள் காணாமல் போனதால் நஞ்சை நிலங்கள் எல்லாம் விவசாயம் செய்வதற்கு லாயக்கற்ற நிலங்களாக மாறி வருகிறது. அதே நேரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் கொடுக்கக்கூடிய உரங்கள், பூச்சிகொல்லி மருந்து ரசாயன மாறிபோனதால் ரசாயனம் ஆன உரங்களை நிலங்களில் போட்டு போட்டு மலட்டு தன்மை ஏற்பட்டு மண்ணின் தன்மை முற்றிலும் மாறுபட்டு எந்த விவசாயமும் பண்ண முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனால் விளைநிலங்களை விற்பதோடு தங்களது தொழிலை மறந்துவிடுகின்றனர். இதே போல் விவசாயம் செய்யக்கூடிய பரப்பளவு குறைந்து விவசாய சாகுபடி பரப்பளவு குறைந்துவிட்டது. விவசாய சாகுபடி குறையும் பட்சத்தில் உணவு உற்பத்தி குறைந்து காணப்படுவதால் உணவு பண்டங்கள் விலை உயரும்போது உணவு பண்டங்களை வாங்கி நுகரக்கூடிய நுகர்வோர்கள் பெரு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விவசாய நிலங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் கண்மாய், ஏரி, குளங்கள் செல்லக்கூடிய வரத்து கால்வாய்களை சீரமைத்து சீமைகருவேல மரங்களை அகற்றி மீண்டும் விவசாயநிலங்கள் புத்துணர்வு பெற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விவசாயத்தை காப்பாற்ற முடியுமென விவசாயிகள் தெரிவித்தனர்.

The post சிறுதானியத்திலும் செழிப்பு இல்ல… மானாவாரியும் மகசூல் இல்ல… தடம் மாறிய விவசாயத்தால் தத்தளிக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Related Stories: