நாகப்பட்டினம் மாவட்டத்தில் வீரதீர செயல்புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருது

 

நாகப்பட்டினம், நவ.19: நாகை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெண் கல்வி, பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணத்தை தடுத்தல் வேறு ஏதாவது சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல், சமூக அவலங்கள் மூடநம்பிக்கைகள் மற்றும் அதனை தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வெளியிட்டிருத்தல் மற்றும் ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற செயல்களில் பாடுபட்டு வீரதீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு மாநில விருதை அறிவித்து ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி நடப்பாண்டிற்கு சேவை புரிந்து வரும் சிறந்த பெண் குழந்தை ஒருவருக்கு ஜனவரி.24ம் தேதி தேசிய பெண் குழந்தை தினத்தில் பாராட்டு பத்திரமும் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது. விருதிற்கு குழந்தையின் பெயர், தாய், தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம், குழந்தை ஆற்றிய அசாதாரண வீர தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் உரிய முன் மொழிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை, குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனங்களும் அனுப்பலாம். நாகை மாவட்டத்தில் விருதினை பெறுவதற்கு தகுதியான நபர்கள் இருப்பின் விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், திட்ட செயலாக்க அலுவலகம், பொதுபணித் துறை கட்டிட குடியிருப்பு வளாகம், காடம்பாடி நாகை என்ற முகவரிக்கு வரும் 28ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் வீரதீர செயல்புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருது appeared first on Dinakaran.

Related Stories: