மழைநீரை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்

 

ராஜபாளையம், நவ.18: ராஜபாளையம் நகராட்சி 34வது வார்டு பகுதியில் திருவனந்தபுரம் விஐபி நகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கனமழை காரணமாக தண்ணீர் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியேற முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் சுகாதார சீர்கெட்டு ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதாகவும், விஷ ஜந்துகள் படையெடுப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். முறையான வாறுகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கியுள்ளது.
மேலும் அதே பகுதியில் 4 ஏக்கர் நிலத்தில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கீரை வகைகள் பயிரிட்டு வருகின்றனர்.

அங்கும் மழைநீர் சூழ்ந்ததால் கீரை விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றனர். இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். எனவே உடனடியாக மழைநீரை அகற்ற வேண்டும், வாறுகால் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் சார்லஸ் தலைமையிலான போலீசார் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்த பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

The post மழைநீரை அகற்றக்கோரி மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: