மாநில உரிமைகளை மதிக்காத ஒன்றிய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்

சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: எழுச்சியையும் உணர்ச்சியையும் ஜனநாயகக் களத்தில் உருவாக்கியுள்ளது குமரி முனையிலிருந்து தொடங்கிய திமுக இளைஞரணியின் கருப்பு-சிவப்பு சீருடையுடன் கூடிய இருசக்கர வாகனப் பேரணி. நவம்பர் 15ம் நாள் குமரி முனையில் தொடங்கிய இந்தப் பேரணி 234 தொகுதிகளுக்கும் 13 நாட்களில் சென்று, மொத்தமாக 8 ஆயிரத்து 647 கிலோ மீட்டர் பரப்புரை பயணம் மேற்கொண்டு நவம்பர் 27ம் நாள் சேலத்தில் நிறைவடைகிறது. அந்த சேலத்தில் தான் டிசம்பர் 17ம் நாள் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு மாநில உரிமை மீட்பு மாநாடாக எழுச்சிமிக்க இளையோரின் புதுப் பாய்ச்சலுடன் நடைபெறவிருக்கிறது.

இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்பில் திமுகவை உருவாக்கி 30 ஆண்டுகள் கடந்த நிலையில், புதிய இளைஞர்களால் இயக்கத்திற்குப் புது ரத்தம் பாய்ச்சும் வகையில் தான் 1980ம் ஆண்டு ஜூலை 20ம் நாள் மதுரை ஜான்சிராணி பூங்காவில் திமுகவின் இளைஞரணியை கலைஞர் தொடங்கி வைத்தார். இளைஞரணியின் செயலாளராக 1982ல் உங்களில் ஒருவனான என்னை நியமித்தது திமுக தலைமை. ஊர்வலமா, கண்டன ஆர்ப்பாட்டமா, மறியலா, மாநாடா எதுவாக இருந்தாலும் இலட்சியப் படை வீரர்களாக இளைஞரணியின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். இளைஞரணியின் தலைமை அலுவலகமாக அன்பகம் கட்டடத்தைப் பெறுவதற்கான நிதி திரட்டவும் தமிழ்நாடு முழுவதும் உங்களில் ஒருவனான நான் பயணித்தேன். இளைஞரணியின் துணை அமைப்பாளர்கள் துணை வருவார்கள்.

கிளைகள்தோறும் திமுகவின் இருவண்ணக் கொடியேற்றம், படிப்பகங்கள் திறப்பு, கழகத்தினர் வீட்டில் தேநீர் அருந்தி மகிழ்தல், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதல், பொதுக்கூட்டம் என ஒவ்வொரு நிகழ்வுமே கொள்கை விளக்கமாக அமையும். ஒவ்வொரு நிகழ்விலும் நிதி திரட்டப்படும். அப்படி திரட்டிய நிதியில்தான், திமுகவின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்த பேராசிரியர் இளைஞரணி, தொ.மு.ச., சென்னை மாவட்ட கழகம் ஆகியோருக்கிடையே வைத்த ஆரோக்கியமான போட்டியில், அவர் நிர்ணயித்த பத்து லட்ச ரூபாய் என்ற இலக்கைக் கடந்து, 11 லட்ச ரூபாயை நிதியாகத் திரட்டி, தலைமையிடம் அளித்து அன்பகத்தை வசமாக்கியது இளைஞரணி. அன்பான இதயங்கள் கொண்ட தமிழ்நாட்டு மக்களும் நம் வசமாயினர்.

எத்தனையெத்தனை நினைவுகளோ நெஞ்சத்தில் சுழல்கின்றன. தான் வளர்த்த பிள்ளை, தன் தோளுக்கு மேல் வளர்ந்து, தானே தன் கடமைகளை முனைப்புடனும் சிறப்புடனும் நிறைவேற்றும் ஆற்றலைப் பார்த்து மகிழும் தாயின் மனநிலையுடன், உதயநிதியையும் அவர் தலைமையிலான இளைஞரணியில் உள்ள ஒவ்வொருவரின் செயலாற்றலையும் கண்டு மகிழ்கிறேன். மாநாடு சிறக்க தாயுள்ளத்துடன் வாழ்த்துவதுடன், தாய்ப் பாசத்துடன் சில அறிவுரைகளை மாநாடு நடைபெறும் வரை அவ்வப்போது இத்தகைய மடல் வாயிலாக வழங்குவேன். அரசியல் மாண்புகளையோ மாநில உரிமைகளையோ மதிக்காத ஒன்றிய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் கூட மதிக்காத நியமனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றன. மதவாத மொழி ஆதிக்க – மானுட விரோத அரசியல் ஒவ்வொரு மாநில மக்களையும் நடுங்கச் செய்கிறது. இவை எல்லாவற்றுக்கும் எதிரான நல்ல தீர்ப்பை 2024ம் ஆண்டில் மக்கள் எழுதப் போகிறார்கள். அதற்கான விழிப்புணர்வு பரப்புரைதான் இளைஞரணி மேற்கொண்டிருக்கும் இரு சக்கர வாகனப் பேரணி. கருப்பு-சிவப்பு இளைஞர் படை மக்களிடம் செல்லட்டும். மாநில உரிமைகள் பறிக்கப்படுவதால் நீட் தேர்வு போன்ற கொடூரங்கள் எத்தனை உயிர்களைப் பறித்துள்ளன என்பதை எடுத்துச் சொல்லட்டும். நீட் விலக்கிற்கான அரைக் கோடி கையெழுத்துகளைப் பெறட்டும். ஜனநாயகப் போர்க்களத்தில் வெல்லட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் கூட மதிக்காத நியமனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சி தத்துவத்தைச் சிதைக்கின்றன.

The post மாநில உரிமைகளை மதிக்காத ஒன்றிய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: