உலக கோப்பை 160 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அமர்க்களம்: இந்திய அணி தொடர்ச்சியாக 9வது வெற்றி

பெங்களூரு: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில், நெதர்லாந்து அணியுடன் மோதிய இந்தியா 160 ரன் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 9வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன் குவித்தது. கேப்டன் ரோகித் 61 ரன் (54 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஷுப்மன் கில் 51 ரன் (32 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), விராத் கோஹ்லி 51 ரன் (56 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), கே.எல்.ராகுல் 102 ரன் (64 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.ஷ்ரேயாஸ் 128 ரன் (94 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்), சூரியகுமார் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நெதர்லாந்து பந்துவீச்சில் பாஸ் டி லீட் 2, வான் மீகரன், வாண்டெர் மெர்வ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 411 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து, 47.5 ஓவரில் 250 ரன் எடுத்து ஆல் அவுட்டானது.

தேஜா நிடமனரு அதிகபட்சமாக 54 ரன் (39 பந்து, 1 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினார். சைப்ரண்ட் 45, ஆக்கர்மேன் 35, மேக்ஸ் ஓ தாவுத் 30, வான் பீக், வாண்டெர் மெர்வ் தலா 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். வான் மீகரன் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்திய பந்துவீச்சில் பும்ரா, சிராஜ், குல்தீப், ஜடேஜா தலா 2, கோஹ்லி, ரோகித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 160 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று, ஒரு போட்டியில் கூட தோற்காமல் 18 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்தது. ஷ்ரேயாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.தகுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு உலக கோப்பையில் பங்கேற்ற நெதர்லாந்து அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்தாலும்… தென் ஆப்ரிக்கா, வங்கதேசம் அணிகளுக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசளித்த திருப்தியுடன் வெளியேறியது.

நடப்பு உலக கோப்பை தொடரில் இதுவரை 592 சிக்சர்கள் விளாசப்பட்டுள்ளன. இந்திய அணி கேப்டன் ரோகித் 9 போட்டியில் 24 சிக்சர்களை தூக்கி முதலிடம் வகிக்கிறார். ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் (22 சிக்சர்) 2வது இடத்திலும், தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் (21 சிக்சர்) 3வது இடத்திலும் உள்ளனர். ஆஸி. வீரர்கள் மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் இருவரும் தலா 20 சிக்சர்களை விளாசி டாப் 5ல் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் 5 பேருமே அரையிறுதியில் விளையாட உள்ளதால், முதலிடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.

* நடப்பு தொடரில் இதுவரை 2109 பவுண்டரிகள் அடிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையிலும் இந்தியாவின் ரோகித் (58 பவுண்டரி) நம்பர் 1 இடத்தில் உள்ளார். அடுத்த 4 இடங்களை தென் ஆரிக்காவின் டி காக் (57 பவுண்டரி), இந்தியாவின் விராத் கோஹ்லி (55 பவுண்டரி), நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா (52 பவுண்டரி), டெவன் கான்வே (15 பவுண்டரி) ஆக்கிரமித்துள்ளனர்.

* இலங்கை அணிக்கு எதிராக டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. நெதர்லாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுக்கு 410 ரன் குவித்த இந்தியா 2வது இடம் வகிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன் எடுத்தது 3வது அதிகபட்ச ஸ்கோராகும். இந்த 2 போட்டிகளும் பெங்களூருவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

* நெதர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 309 ரன் வித்தியாசத்தில் வென்றது, ரன் அடிப்படடையில் பெற்ற மிகப் பெரிய வெற்றியாகும். இந்திய அணி 302 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2வது இடத்தில் உள்ளது.

* அதிக விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற வெற்றிகளில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியையும், இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானையும் வீழ்த்தி முன்னிலை வகிக்கின்றன.

* அதிக சதம் விளாசிய டாப் வீரர்கள்: டி காக் (4 சதம்), ரச்சின் (3), மேக்ஸ்வெல், மார்ஷ், கோஹ்லி, வாண்டெர் டுஸன், வார்னர் தலா 2 சதம் விளாசி உள்ளனர். இது தவிர 18 வீரர்கள் தலா ஒரு சதம் அடித்துள்ளனர்.

The post உலக கோப்பை 160 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அமர்க்களம்: இந்திய அணி தொடர்ச்சியாக 9வது வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: