பெண்களின் பெயரில் போலியாக நிறுவனங்கள் தொடங்கி ஜிஎஸடி மோசடி

ஒன்றிய அரசு ஜிஎஸ்டி என்கிற சரக்கு மற்றும் சேவை வரியை கடந்த 2017ம் ஆண்டு கொண்டு வந்தது. எந்தவொரு வணிகத்தின் விற்பனை வரம்பு ரூ.40 லட்சம், ரூ.20 லட்சம் அல்லது ரூ.10 லட்சத்தை தாண்டினால், வணிக உரிமையாளர் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் தன்னை ஒரு சாதாரண வரிக்கு உட்பட்ட நபராக பதிவு செய்ய வேண்டும். சில வணிகங்களுக்கு ஜிஎஸ்டி பதிவு கட்டாயமாகும். ஜிஎஸ்டி பதிவு இல்லாமல் ஒரு நிறுவனம் வணிகத்தை மேற்கொண்டால் அது குற்றமாக கருதப்படும். உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு பல்வேறு வகையாக ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் என வரி விதிக்கப்பட்டது. இதில் பின்னலாடைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. பின்னலாடை நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி அடையாள எண் (GSTIN) கட்டாயமாக்கப்பட்டது.

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஜிஎஸ்டி அடையாள எண்களை முறைப்படி பெற்று வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஜிஎஸ்டி அடையாள எண் என்பது 15 இலக்கங்களை கொண்டது. இந்த எண்களை பெறுவதன் மூலம் ஜிஎஸ்டி சட்டங்களால் வழங்கப்படும் நலத்திட்டங்களை பெறலாம். ஜிஎஸ்டி அடையாள எண் பெறுவதன் மூலம் நேர்மையான வர்த்தகம் நடைபெறும். வருமான வரி தாக்கல் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதுபோன்ற ஏராளமான நன்மைகள் உள்ளன.

ஜிஎஸ்டி அடையாள எண் பெற பதிவு செய்ய பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு தகவல், முகவரி சான்று, டிஜிட்டல் கையொப்பம், புகைப்படம் மற்றும் நியமன சான்று உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும். ஜிஎஸ்டி அடையாள எண் பெறாமல் இருப்பது சட்டப்படி குற்றமாகும். இதனை அதிகாரிகள் கண்டறிந்தால் நிறுவனங்கள் மீதும், அதன் உரிமையாளர்கள் மீதும் குற்ற நடவடிக்கையும், அபராதமும் விதிக்கலாம். திருப்பூரில் இருந்து தினமும் பல கோடிக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதுபோல் உள்நாட்டு வர்த்தகம் என கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஜிஎஸ்டி அடையாள எண் பெற்றுள்ளன.

இந்த நிலையில் திருப்பூரில் நிறுவனங்களே நடத்தாதவர்களின் ஆவணங்களை தவறாக பயன்படுத்தி ஜிஎஸ்டி அடையாள எண்கள் பெறப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடியை கலைஞர் மகளிர் உரிமை திட்டம் காட்டிக்கொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் ரூ..1000 மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்து பயனாளிகளுக்கு கடந்த 2 மாதமாக வழங்கி வருகிறது. முதல் கட்டமாக கிடைக்க பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அரசு கால அவகாசம் வழங்கி விண்ணப்பங்களை பெற்று பயனாளிகளை தேர்வு செய்துள்ளது. அந்த வகையில் திருப்பூர் சாயப்பட்டறை வீதி பெத்திசெட்டிபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் பெண்களில் பலர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்தனர். ஆனால், 80க்கும் மேற்பட்ட பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதனை அறிந்து மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வரும் அந்த பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உரிமைத்தொகை ெபற உரிமை உள்ள தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை அவர்களால் நம்ப முடியவில்லை. எனவே பாதிக்கப்பட்ட அந்த பெண்கள் திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு சென்று விசாரித்தனர்.  அப்போது அவர்களது பெயரில் நிறுவனங்கள் செயல்படுவதாகவும், ஜிஎஸ்டி அடையாள எண் பெற்று பல லட்சம் ரூபாய் பரிமாற்றம் நடைபெற்று இருப்பதும் தெரியவந்தது. இதை அறிந்த பெண்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏழைகளான நமது பெயரில் ஜிஎஸ்டி செலுத்தும் நிறுவனமா? என அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அப்போதுதான் அவர்களை சிலர் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டிருப்பதை உணர்ந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த கும்பல் அரசின் நலத்திட்ட உதவிகளை வாங்கி தருவதாக கூறி ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சென்றதை அவர்கள் உணர்ந்தனர். அவர்கள்தான் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அந்த பெண்களுக்கு எழுந்துள்ளது.

திருப்பூருக்கு (டாலர் சிட்டி) தினமும் வெளி மாநிலங்களில் இருந்து ஆடைகள் வாங்க பலரும் வருகிறார்கள். இவ்வாறு வருகிறவர்கள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் மதிப்புள்ள ஆடைகளை வாகனங்களில் கொண்டு சென்றாலும், ஆடைகளை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் உள்ள பகுதிகளுக்கு கொண்டு சென்றாலும் மின்னணு வழி ரசீது தேவைப்படும். அந்த மின்னணு வழி ரசீது பெற வேண்டும் என்றால் ஜிஎஸ்டி அடையாள எண் கட்டாயம் தேவை. அவ்வாறு ஜிஎஸ்டி அடையாள எண் இல்லாதவர்கள்தான் இந்த பெண்களின் ஆவணங்களை பயன்படுத்தி பெறப்பட்ட ஜிஎஸ்டி அடையாள எண்ணுடன் மின்னணு வழி ரசீது பெற்று ஆடைகளை கொண்டு சென்று மோசடிகளை அரங்கேற்றியுள்ளனர்.

ஜிஎஸ்டி அடையாள எண் பெறுவதற்கான விண்ணப்பம் ஆன்லைனில்தான் பெறப்பட்டு வருகிறது. அதில் மாவட்டம், மாநிலம், நிறுவனத்தின் பெயர், பான் கார்டு எண், இமெயில் முகவரி, செல்போன் எண் கேட்கப்பட்டிருக்கும். அதனை நிரப்பி அனுப்பும்போது செல்போனுக்கு ஓடிபி எண் வரும். அந்த எண்ணையும் பதிவு செய்தால் மட்டுமே ஜிஎஸ்டி அடையாள எண் பெறமுடியும். ஆனால், இந்த பெண்களிடம் என்ன சொல்லி, எப்படி சொல்லி ஓடிபி எண்ணை மோசடி கும்பல் பெற்றார்கள் என்பதும் பலே ேமாசடியாக பார்க்கப்படுகிறது.

ஏமாற்றப்பட்ட பெண்களின் ஆவணங்களை பயன்படுத்தி போலியான நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டு மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது. மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வைத்திருப்பவர்களுக்கு ஜிஎஸ்டி அடையாள எண் பெற்றுக்கொடுக்கவும் இந்த மோசடி கும்பல் உதவி இருக்கும் என்று கருதப்படுகிறது. இதேபோல், தமிழ்நாடு முழுவதும் ஏராளமானோர் பெயரில் ஜிஎஸ்டி கணக்கு தொடங்கி போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு மெகா மோசடி நடந்து உள்ளது தெரியவந்து உள்ளது. எனவே, ஜிஎஸ்டி அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசடி மூலம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற முடியாமல் போன பெண்கள் அந்த உதவியை பெற வசதியாக, போலியாக பெறப்பட்ட ஜிஎஸ்டி அடையாள எண்களை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post பெண்களின் பெயரில் போலியாக நிறுவனங்கள் தொடங்கி ஜிஎஸடி மோசடி appeared first on Dinakaran.

Related Stories: