ஆன்லைனில் வலைவிரிக்கும் கந்துவட்டி கும்பல் கடன் கொடுத்து கழுத்தை இறுக்கும் அபாய ‘ஆப்’கள்

* சீனாவின் பூர்வீகம் காட்டும் கோரமுகம்

* உயிரை மாய்க்கும் இந்தியர்கள் அதிகரிப்பு

 

நவீனமயமாகி விட்ட இன்றைய மனித வாழ்க்கையில் அனைத்துமே நமக்கு எளிதாக கிடைத்து விடுகிறது. இப்படி எளிதாக கிடைக்கும் பல தேவைகள் நமக்கு பெரும் சிக்கலையும் ஏற்படுத்தி விடுகிறது. இந்த வகையில் இணையதளத்தில் புதிய அரக்கனாய் உருவெடுத்து நிற்பவை கடன் ‘ஆப்’கள். இந்த டிஜிட்டல் கடன் செயலிகள்(ஆப்கள்) புற்றீசல் போல பெருகி வருகிறது. இவை 2 விதமான கடன்களை வழங்குகிறது. முன்பண கடன், தனிநபர் கடன் என்ற பெயர்களில் ₹500 முதல் ₹50 ஆயிரம் வரை கடன் வழங்குகின்றன.

கடன் பெறுவதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து சம்பந்தப்பட்ட செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும். புகைப்பட அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்படி பதிவேற்றம் செய்து விபரங்கள் சரிபார்க்கப்பட்ட அடுத்த நிமிடம் நமது வங்கிக்கணக்கில் பணம் சேர்ந்து விடும். அதற்குரிய வட்டியும் உடனடியாக பிடிக்கப்பட்டு விடும்.

கடன்பெற்றவர் குறிப்பிட்ட நாளில் கடன்தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்தப்படவில்லை என்றால் ஆன்லைன் கந்துவட்டி கும்பல் காட்டும் கோரமுகம் தான் மிகவும் அபாயகரமானது. ஒருவர் செல்ேபானில் கடன்செயலியை பதிவிறக்கம் செய்யும் போதே செல்போனில் உள்ள அனைத்து எண்களும், புகைப்படங்களும் ஆன்லைன் கந்துவட்டி கும்பலின் கைக்கு சென்றுவிடும். உரிய நாளில் கடன் தொகையை திருப்பி செலுத்தாவிட்டால் செல்ேபானில் உள்ள எண்களுக்கு அவர் குறித்த அவதூறு செய்திகள் அனுப்பப்படும். கடன்பெற்றவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மார்பிங் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பரப்பப்படும். ஒரேநாளில் வெவ்வேறு எண்களில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வரும். ஆபாசமாக திட்டுவார்கள். நள்ளிரவில் தூங்கவிடமாட்டார்கள். போலி எப்ஐஆர் நகல்கள் அனுப்பப்படும். இதில் மனஅழுத்தத்தின் உச்சத்திற்கு செல்வோர், தற்கொலை செய்து உயிரை மாய்க்கும் அவலமும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இவ்வாறு கடன் வழங்கும் செயலிகளில் பெரும்பாலானவை சீனாவை பூர்வீகமாக கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இங்குள்ள உள்ளூர் கும்பலின் உதவியோடு சீன நிறுவனங்கள் ஆன்லைன் கந்துவட்டி கொடுமையை அரங்கேற்றி வருகிறது.வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களிலும் ஆன்லைன் கந்துவட்டி கும்பல் இயங்குகிறது. 7 நாட்களில் இருந்து 12 நாட்களுக்குள் கடனை திருப்பி செலுத்தலாம் என்று ஆசை காட்டுகின்றனர். இப்படி மக்களை உடனடி கடன் செயலி வலையில் வீழ்த்தி, அவர்களை மிரட்டியும் அவமானப்படுத்தியும் பணம் பறிக்கும் ஒரு பெரிய மோசடி நடந்து வருகிறது.

இந்தச் செயலிகளுக்காக பணியாற்றும் கடன் வசூலிப்பு முகவர்களின் துன்புறுத்தலால், இதுவரை குறைந்தது 60 இந்தியர்கள் தங்களது உயிரை மாய் த்துக்கொண்டுள்ளனர் என்ற திடுக்கிடும் தக வல்களும் அம்பலமாகியுள்ளது. கடன் செயலிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள கணிப்பொறி வல்லுநர்கள் இது குறித்து கூறியதாவது: மிக மோசமான இந்த ஏமாற்று வேலை மூலம் இந்தியாவிலும் சீனாவிலும் லாபம் ஈட்டும் இந்த பண வசூலிப்பு வர்த்தக மாதிரி எளிமையானது.

ஆனால் குரூரமானது. எந்தச் சிரமமுமின்றி சில நிமிடங்களில் கடன் தர உறுதியளிக்கும் செயலிகள் ஏராளம் உள்ளன. அவை அனைத்தும் கொள்ளையடிப்பவை அல்ல. ஆனால், பல செயலிகளை நீங்கள் பதிவிறக்கம் செய்தவுடன் உங்கள் தொலைபேசியில் உள்ள தொடர்புகள், புகைப்படங்கள் மற்றும் அடையாள ஆவணங்களை எடுத்துக்கொண்டு, பின் அந்தத் தகவல்களைப் பயன்படுத்தி மிரட்டி பணம் பறிக்கின்றன.

வாடிக்கையாளர்கள் சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டாலும், சில சமயங்களில் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினாலும் இந்தச் செயலிகள் சேகரித்த தகவல்களை கால் சென்டருடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அங்கு மடிக்கணிணிகள் மற்றும் தொலைபேசிகளுடன் இருக்கும் இளம் முகவர்கள் மக்களைத் துன்புறுத்தவும், கடனை திருப்பி வாங்க அவர்களை அவமானப்படுத்தவும் பயிற்சியளிக்கப்படுகிறார்கள்.

உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களால் இதுபோன்ற மோசடிகள் நடக்கிறது. இந்தியாவில் மட்டும், கடன் செயலிகளால் துன்புறுத்தப்பட்டு தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்தவகையில் 50 சதவீத தற்கொலைகள் தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் நடந்துள்ளன. இதில், பெரும்பாலானவர்கள் 20 மற்றும் 30 வயதுடையவர்கள். ஒரு தீயணைப்பு வீரர், விருது பெற்ற இசைக் கலைஞர், மூன்று வயது மற்றும் ஐந்து வயது மகள்களைக் கைவிட்ட ஒரு தம்பதி, ஒரு தாத்தா மற்றும் பேரன் என்று இந்த பட்டியல் நீளமானது. உயிரை மாய்த்துக் கொண்டவர்களில் 4 பேர் பதின்ம வயதினர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மோசடியைப் பற்றி பேசுவதற்கே அஞ்சுகின்றனர். பணத்தை மீட்பதற்காக கால்ஃப்லெக்ஸ் கார்ப்பரேஷன் என்ற முறையில் இளைஞர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். வாடிக்கையாளர் பணம் செலுத்தத் தவறினால், இந்நிறுவனம் முதலில் அவர்களை தொந்தரவு செய்யத் தொடங்குகிறது, பின்னர் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை தொந்தரவு செய்கிறது. பணத்தை திருப்பிச் செலுத்தும் இந்த தொல்லைகள் தொடரும்.

இதற்கடுத்து செயலிகள் தொலைபேசியில் அழைத்தும், ஆபாசக் குறுஞ்செய்திகள் மூலமும் கடன்வாங்கியவருக்கு தொல்லை கொடுக்கும். மேலும் அவரது செல்போனில் இருக்கும் தொடர்பு எண்களுக்கும் தகவல் அனுப்பத் தொடங்கும். கடன் பெற்றவரை ஒரு ஏமாற்றுக்காரன், திருடன் போலச் சித்தரிப்பார்கள். ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தின் முன்பு தங்களின் நற்பெயரை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ேற நினைப்பார்கள்.

சொற்ப பணத்திற்காக தங்கள் நற்பெயரை யாரும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றே எண்ணுவார்கள். அந்த எண்ணமே அவர்களை வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்த வைக்கும். பணம் செலுத்தப்பட்டதும், ‘வெற்றி’ என்று கணினி காண்பிக்கும். இதன்பிறகே அவர்கள் மீதான இந்த நூதன குரூரதாக்குதல் நிற்கும். இதில் மனஅழுத்தத்தின் உச்சிக்ேக செல்லும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்யும் அவலமே சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இவ்வாறு கணிப்பொறி நிபுணர்கள் கூறினர்.

200 செயலிகள் நீக்கப்பட்டது

இந்த கடன் செயலிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. ஆர்பிஐ, மத்தியநிதி அமைச்சகத்திலும் புகார் கடிதங்கள் குவிந்து கிடக்கிறது. இதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதில் ஏராளமான சட்டச்சிக்கல்களும் உள்ளது. நடப்பு நிதியாண்டில் (2023) டிஜிட்டல் கடன் வழங்கும் பயன்பாடுகளுக்கு எதிரான புகார்கள் 2மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த வகையில் 1,602புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய நிதி அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. மேலும் தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ள தகவல்களின் படி இணைய மோசடி வழக்குகள் 2021ம் ஆண்டில் 14,007 என்று இருந்தது. இதில் டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்களின் வழக்கும் அதிகளவில் உள்ளது. சமீபகாலங்களில் கூகுள் நிறுவனம் தனது பிளேஸ்டோரில் இருந்து இதுபோன்ற 200க்கும் மேற்பட்ட கடன் செயலிகளை நீக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது என்கின்றனர் சட்டவல்லுநர்கள்.

திரைமறைவில் 3 ஆயிரம் பேர்

இந்தியா, மெக்சிகோ மற்றும் கொலம்பியாவில் ஒரு குறிப்பிட்ட சீன நிறுவனத்திற்கு சொந்தமான கடன் செயலிகள் அதிகளவில் உள்ளன. இப்போது லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் இந்த கடன் செயலிகள் விரிவடைந்து வருகின்றன. பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில் மட்டும் இந்த கடன் செயலிகளின் வசூல் முகவர்களாக 3 ஆயிரத்திற்கும் ேமற்பட்டோர் திரைமறைவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் எந்த நேரத்திலும் கடன் வசூல் சேவைகளை வழங்க தயாராக உள்ளனர்.

கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், உடனடியாக வாட்ஸ் அப்பில் சேர்க்கின்றனர். மூன்றாவது நாளில் இருந்து ஒரே நேரத்தில் வாட்ஸ் அப்பில் ஏராளமான குறுஞ்செய்தியும் அனுப்பப்படுகிறது. தொலைபேசி எண்ணுக்கும் தொடரந்து அழைப்பு வரும். சம்மந்தப்பட்டவர்கள் செல்போனை எடுக்காவிட்டால் அவரது தொடர்பில் உள்ள அனைத்து எண்களையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்படும். இதனால் பதறிப்போகும் கடனாளிகள் எப்பாடு பட்டாவது அதனை செலுத்தி விடுகின்றனர் என்பதும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள தகவல்.

The post ஆன்லைனில் வலைவிரிக்கும் கந்துவட்டி கும்பல் கடன் கொடுத்து கழுத்தை இறுக்கும் அபாய ‘ஆப்’கள் appeared first on Dinakaran.

Related Stories: