தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக எல்லையில் பெய்து வரும் பருவமழை காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் மழை காரணமாக சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து 3,300 கனஅடியாக உள்ளது.
இதனால் சாத்தனூர் அணையின் மொத்த உயரமான 119 அடியில் தற்போது 116.75 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி மின்சாரம் தயாரிக்கப்படும் மதகு வழியாக 1000 கனஅடி நீர் திறப்பது வழக்கம். முதற்கட்டமாக இன்று காலை 1000கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் மின்சாரம் தயாரிக்கப்பட்ட பின்னர் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. மீதமுள்ள உபரி நீர் முழுவதும் 11கண் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்படும் என சாத்தனூர் அணை உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சாத்தனூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழிப்புரம் ஆகிய மாவட்ட கரையோர மக்களுக்கு ெவள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, கடந்து செல்லவோ, கால்நடைகளை இறக்கவோ கூடாது என வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர் தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
The post திருவண்ணாமலை மாவட்டம்; சாத்தனூர் அணையில் 1000 கனஅடி நீர் திறப்பு: தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.
