உசிலம்பட்டி அருகே கோயில் நிலத்தில் அமையும் சுற்றுச்சுவருக்கு எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

உசிலம்பட்டி, நவ. 4: உசிலம்பட்டி அருகே கோயில் நிலத்தில் கட்டப்படும் சுற்றுச்சுவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் ஆர்டிஓ அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர் . உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. முறையான பராமரிப்பு பணிகள் இல்லாததால், இக்கோயிலின் பல்வேறு பகுதிகளும் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் கோயில் சீரமைப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலம் வருவாய்துறையால் அளவீடு செய்யப்பட்டு மீட்கப்பட்டது. இந்த நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஓட்டக்கோவில் பாறை உள்ளது. இந்த பாறையை அப்பகுதி விவசாயிகள் தானியங்களை உலர்த்துவதற்கும், களமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கோயில் நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டினால், விவசாயிகள் அந்த களத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகும் என தெரிகிறது. இதனால் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளை நிறுத்தக்கோரி அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைதொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தையும் அவர்கள் முற்றுகையிட்டனர். பின்னர் தங்கள் கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கினர்.

The post உசிலம்பட்டி அருகே கோயில் நிலத்தில் அமையும் சுற்றுச்சுவருக்கு எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: