பள்ளிப்பட்டு அருகே நாகாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் வழிபாடு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே நாகாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே நொச்சிலி ஊராட்சி காப்பூர் கண்டிகை கிராமத்தில் அருள்மிகு நாகாலம்மன் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழாவை யொட்டி திருக்கோயில் மற்றும் கிராம வீதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருக்கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு, நித்திய ஹோம குண்டம் பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று காலை மஹா பூர்ணாஹுதி ஹோம பூஜைகளை தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோபுர கலசத்திற்கு புனித நீரால் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது திருக்கோயில் முன்பு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கபட்டது. மேலும் அம்மனுக்கு அபிஷேக பூஜைகள், தீபாராதானையை தொடர்ந்து பக்தர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில், பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

The post பள்ளிப்பட்டு அருகே நாகாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: