திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு: அங்கன்வாடி கட்டிடங்களை ஒரு வாரத்திற்குள் திறக்க உத்தரவு

திருத்தணி: திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் அரசின் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருத்தணி ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அனைத்து அங்கன்வாடி கட்டிடங்களையும் ஒரு வாரத்திற்குள் திறக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். திருத்தணி ஒன்றியம் பாகவதபுரம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை நேற்று கலெக்டர் பிரபுசங்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது திருத்தணி ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அனைத்து அங்கன்வாடி மைய கட்டிடங்களையும் ஒரு வாரத்திற்குள் திறக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வீரகநல்லூர் ஊராட்சி பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள 92 வீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக ரூ.65.97 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பழுது பார்க்கும் பணிகளை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். அப்போது ரூ.15.46 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் உட்கட்டமைப்பு வளர்ச்சி பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து தாடூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மீட்டெடுக்கப்பட்ட கொத்தடிமைகளின் ‘சிறகுகள்’ செங்கல் சூளையை பார்வையிட்டு, அந்த மக்களின் குறைகளை கேட்டறிந்த கலெக்டர், உடனடியாக அவர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் பாகவதபுரத்தில் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார் சாலையையும், கன்னிகாபுரம் ஊராட்சியில் இருளர் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை இடத்தினையும் கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் சுகபுத்திரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேல், திருத்தணி ஒன்றியக்குழு தலைவர் தங்கதனம், உதவி செயற்பொறியாளர்கள் சுமதி, யுவராஜ் உதவிபொறியாளர் தர்மேஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

* மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 7 மற்றும் 9 ஆகிய 2 நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டிகள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியே நடைபெறும் இந்த பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும். மேலும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வுசெய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத் தொகையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

பள்ளி போட்டியானது முற்பகல் 10 மணிக்கும், கல்லூரிப் போட்டி பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கும். திருவள்ளூர் மாவட்டத்தில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடமும், கல்லூரி மாணவ மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும் அனுமதி கடிதம் பெற்று பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் த.பிரபு சங்கர் கேட்டுக் கொண்டார்.

The post திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு: அங்கன்வாடி கட்டிடங்களை ஒரு வாரத்திற்குள் திறக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: