கேரள குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி: நீலகிரி எல்லையில் 11 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்

ஊட்டி: கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கேரள – நீலகிரி எல்லையில் அமைந்துள்ள 11 சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக மோப்பநாய் உதவியுடன் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம் கொச்சி, களமசேரியில் உள்ள கிறிஸ்தவ கூட்ட அரங்கில் நேற்று காலை ஏராளமான கிறிஸ்தவர்கள் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. அடுத்தடுத்து 3 முறை குண்டு வெடித்தது. இதனால் அந்த பகுதியே தீ பிளம்பாக காட்சியளித்தது. இச்சம்பவத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிறிஸ்தவ கூட்ட அரங்கில் வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு என கேரள போலீசார் உறுதிபடுத்தி உள்ளனர். மேலும் என்ஐஏ., அதிகாரிகளும் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் கேரள எல்லையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, நெல்லை உள்ளிட்ட மாவட்ட எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், சோதனை சாவடிகளில் தீவிர தணிக்கை மேற்கொள்ளவும் தமிழக டிஜிபி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் கேரள எல்லையோரத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் சோலாடி, மண்வயல் உள்பட 11 மாநில சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீலகிரிக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர தணிக்கைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் காவலர்கள் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து சோதனை சாவடிகளிலும் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக அடையாளம் தொியாத நபர்கள் நடமாட்டம் இருப்பது தொியவந்தால் பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடிய விடிய கண்காணிப்பு பணியை மேற்கொண்ட காவல்துறையினர் இரண்டாவது நாளாக மோப்பநாய் உதவியுடன் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:திருப்பூர் ரயில் நிலையத்தில் நேற்று மாலை ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன், துணை உதவி ஆய்வாளர் லிஜோ மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். மேலும், ரயில் மற்றும் நடைமேடைகள், வாகனம் நிறுத்தும் இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

The post கேரள குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி: நீலகிரி எல்லையில் 11 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: