பாமக பிரமுகர் கொலை வழக்கு தலைமறைவான 5 பேர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.25 லட்சம்: குமரியில் நோட்டீஸ் ஒட்டி என்ஐஏ தேடுதல்

நாகர்கோவில்: திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் 5 பேர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. சார்பில் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனத்தை சேர்ந்தவர் பாமக பிரமுகர் ராமலிங்கம். இவர் கடந்த 2019 பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். இதில் திருபுவனத்ைத சேர்ந்த நிஜாம் அலி, குறிச்சிமலை பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ், சர்புதீன், முகமது ரிஸ்வான், அசாருதீன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ., இது தொடர்பாக தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

இந்த வழக்கில் திருவிடைமருதூர் திருபுவனத்தை சேர்ந்த முகமது அலி ஜின்னா (37), கும்பகோணத்தை சேர்ந்த அப்துல் மஜித் (40), தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த புர்ஹானுதீன் (31), திருவிடைமருதூரை சேர்ந்த சாகுல் ஹமீத் (30), நபீல்ஹாசன் (31) ஆகிய 5 பேரை என்.ஐ.ஏ. தேடி வருகிறது. தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தனர். இவர்களை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 5 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த பரிசு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 5 நபர்களையும் கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம், ரூ.25 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தொடர்பான நோட்டீஸ், சம்பந்தப்பட்ட 5 பேரின் போட்டோக்களுடன் தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்திலும் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருக்கிறது. மே லும் குமரி – கேரள எல்லையோர பகுதிகளிலும் ஒட்டி உள்ளனர். வாட்ஸ் அப் எண், டெலிபோன் எண், இ மெயில் முகவரி ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும் தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் என்ஐஏ உறுதி அளித்துள்ளது.

The post பாமக பிரமுகர் கொலை வழக்கு தலைமறைவான 5 பேர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.25 லட்சம்: குமரியில் நோட்டீஸ் ஒட்டி என்ஐஏ தேடுதல் appeared first on Dinakaran.

Related Stories: