இந்தியா தொடர்ச்சியாக 6வது வெற்றி: முதலிடத்துக்கு முன்னேற்றம்

லக்னோ: நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 100 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ச்சியாக 6வது வெற்றியை பதிவு செய்த இந்தியா புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியது. வாஜ்பாய் ஏகனா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. கேப்டன் ரோகித், கில் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். கில் 9 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த கோஹ்லி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஷ்ரேயாஸ் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 40 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ரோகித் – கே.எல்.ராகுல் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்தது. ராகுல் 39 ரன் (58 பந்து, 3 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரோகித் 87 ரன் (101 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரஷித் சுழலில் லிவிங்ஸ்டன் வசம் பிடிபட்டார்.

ஜடேஜா 8, ஷமி 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். சிறப்பாக விளையாடிய சூரியகுமார் 49 ரன் (47 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி டேவிட் வில்லி பந்துவீச்சில் வோக்ஸ் வசம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பும்ரா 16 ரன் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட்டாக, இந்தியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன் குவித்தது. குல்தீப் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் வில்லி 3, வோக்ஸ், ரஷித் தலா 2, மார்க் வுட் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 230 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே எளிய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. பேர்ஸ்டோ, மலான் இணைந்து துரத்தலை தொடங்கினர். பும்ரா வேகத்தில் மலான் 16 ரன், ஜோ ரூட் (கோல்டன் டக் அவுட்) அடுத்தடுத்து வெளியேறினர். ஸ்டோக்ஸ் (0), பேர்ஸ்டோ (14 ரன்) இருவரும் ஷமி பந்துவீச்சில் பெவிலியன் திரும்ப, இங்கிலாந்து 39 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. கேப்டன் பட்லர் 10 ரன் எடுத்து குல்தீப் சுழலில் கிளீன் போல்டானார். மொயீன் 15, வோக்ஸ் 10, லிவிங்ஸ்டன் 27, ரஷித் 13 ரன்னில் அவுட்டாகினர். பும்ராவின் துல்லியமான வேகத்தில், மார்க் வுட் சந்தித்த முதல் பந்திலேயே முட்டை போட… இங்கிலாந்து 34.5 ஓவரில் 129 ரன்னுக்கு சுருண்டது. டேவிட் வில்லி 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய பந்துவீச்சில் ஷமி 4, பும்ரா 3, குல்தீப் 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர். பந்துவீச்சுக்கு சாதகமான களத்தில் அடித்து விளையாடி 87 ரன் எடுத்த ரோகித் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 100 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி தொடர்ச்சியாக 6வது வெற்றியை வசப்படுத்திய இந்தியா, புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கும் முன்னேறியது. அடுத்து இந்தியா – இலங்கை மோதும் லீக் ஆட்டம் நவ.2ம் தேதி மும்பை வாங்கடே மைதானத்தில் நடக்க உள்ளது.

The post இந்தியா தொடர்ச்சியாக 6வது வெற்றி: முதலிடத்துக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: