தீபாவளி வந்தாச்சு… கலர் கலரா வந்து இறங்கியாச்சு புது கலெக்‌ஷன்ஸ்: களைகட்டும் ஜவுளி வியாபாரம்

* சிறப்பு செய்தி
தீபாவளி என்று சொன்னவுடனே குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் எண்ணற்ற எதிர்பார்ப்புகள் இருக்கும். ஏன், நடுத்தர குடும்பங்கள் தீபாவளியை கொண்டாடுவதற்காக ஆண்டு முழுவதும் சேமிப்பார்கள். அந்த அளவிற்கு தீபாவளி தமிழர்களின் உணர்வோடு கலந்த பண்டிகையாக மாறிவிட்டது. தீபாவளி என்பது வெறும் பண்டிகை கொண்டாட்டம் மட்டுமல்ல. பொருளாதாரம் சார்ந்த ஒரு விஷயமும் ஆகும். இந்திய பொருளாதார வளர்ச்சியில் இதுபோன்ற மாபெரும் பண்டிகை தினங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஏனெனில் தீபாவளி சமயத்தில் ஜவுளி விற்பனை அபரிமிதமாக இருக்கும். அதேபோல, உணவுப் பொருட்கள், இனிப்பு வகைகள், பழங்கள், இறைச்சி, நகை போன்ற பொருட்களும் அதிகமான அளவில் விற்பனையாகும்.

தீபாவளி பண்டிகை சமயத்தில் பட்டாசு விற்பனையும் அதிகமாக இருக்கும். இதுபோன்ற காரணங்களால் சில்லரை விற்பனையில் நல்ல லாபமும் கிடைக்கும். குறிப்பாக, தீபாவளி என்றாலே நம்மில் உடனே தோன்றுவது புத்தாடைகள் தான். அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளியாக இருந்தாலும் கூட புத்தாடை இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவதில்லை. அவரவர் வசதிக்கேற்ப புத்தாடைகளை வாங்கி தீபாவளியை பளபளக்க வைப்பதில் தவறுவதில்லை. உலகத்திலேயே உணவுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய தொழில் ஜவுளித் தொழில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளுக்கு நாள் ஆடை உற்பத்தியில் பல டிசைன்கள் வந்து வந்து மறைந்து விடுவது வழக்கமான ஒன்று. ஆயத்த ஆடைகள் என்று அழைக்க கூடிய ரெடிமேட் ஆடைகள் தான் நம்மில் பலரின் வரவேற்பை அதிகப்படுத்தி வருகிறது. சீசனுக்கு தகுந்தபடி ஒவ்வொரு விழாக்காலத்திலும் புதிய புதிய டிசைன்கள், தீபாவளிக்கென்றே சலுகைகளையும் வாரி வாரி வழங்குகின்றன. அவ்வாறு தங்கள் வசதிக்கு ஏற்றவாறு வாங்கி அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டாடுவதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை 300க்கும் மேற்பட்ட மிகப் பெரிய ஜவுளிக் கடைகள் உள்ளன. இவற்றை தவிர 3500க்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் சிறிய அளவிலான ஜவுளிக்கடைகள் உள்ளன.

இதன் மூலம் சுமார் 65 ஆயிரம் பேர் நேரடியாக வேலை வாய்ப்பும், 50 ஆயிரம் பேர் மறைமுக வேலைவாய்ப்பும் பெறுகின்றனர். தமிழகத்தில் ஒரு ஆண்டில் நடக்கும் மொத்த ஜவுளி விற்பனையில் 50 சதவீதம் தீபாவளி சீசனில் மட்டும் விற்பனையாகிறது. தமிழகத்தில் ஒரு ஆண்டின் துணி விற்பனை மட்டும் 2 ஆயிரம் கோடியை தாண்டுகிறதாம். இந்த சூழ்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளன. இதனால் பொதுமக்கள் புத்தாடை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னையில் உள்ள ஜவுளிக் கடைகளில் விற்பனை களை கட்டியுள்ளது. முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகள் முதல்வர் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் புதிய ரகங்களில், புதுப் புது டிசைன்களில் ஜவுளிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை வாங்க அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை வழக்கம் போல் தி.நகர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை உள்பட கடை வீதிகளில் உள்ள பிரபல கடைகளில் தீபாவளிக்காக ஸ்பெஷன் டிசைன்களில் ஆடைகளை குவித்துள்ளனர். தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பிருந்தே கூட்டம் அலைமோத தொடங்கி விட்டது.

திருவிழாக் கோலம் போல் காட்சியளிக்கும் தி.நகர், புரசைவாக்கம் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. மக்களை கவரும் வகையில், இந்த ஆண்டும் ஆடைகளில் புதிய ரகங்களை ஜவுளி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் புதிய வரவாக பெண்களை அதிகமாக கவரும் வகையில் லிச்சி சாரீஸ், ஹோம் பிரே சாரீஸ், துவார சாரீஸ், ஆல்யா கட் சாரீஸ், டு டவுன் கிளாத் சாரீஸ் போன்ற சேலை ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. மிடி, கவுன், சுடிதார் லெக்கின், ஜீன்ஸ், கார்டன் டாப், பாப் லெக்கின்ஸ், மசக்கலி, நியூ மாடல் பட்டியாலா போன்ற மாடல்கள் பெண் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இதில் லிச்சி சாரீஸ், மிகப்பெரிய பாடரில் சரிகை வைத்து அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.1000 முதல் ரூ.33,000 வரை விற்கப்படுகிறது. ஹோம் பிரே சாரீஸ் பொறுத்தவரை ஸ்டோன்கள் வைத்து நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன. இதில் குறைந்த பட்சமாக ரூ.1500 முதல் அதிகபட்சமாக ரூ.15,000 வரையில் ஏராளமான மாடல்கள் கடைகளில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று துவாரா புளோரல் சாரீஸ், ஆலியா கட்ஸ் ஆடைகளை பொறுத்தவரை இளம் பெண்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.1000 முதல் ரூ.3000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோன்று குழந்தைகளுக்கு, பாப் பிரின்ஸ் மற்றும் பாப் பிரின்சஸ் என்ற பெயரில் அழகழகான ஆடைகள் அணிவகுத்திருக்கின்றன. இதுமட்டுமின்றி பீச் தாஜ் லூமினனோஸ் மற்றும் விதவிதமான கைத்தறி சாரீஸ்கள் வாங்க பிரபல துணிகடைகளில் பெண்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். அதேபோன்று, ஆண்களுக்கு கார்டன், ஜீன்ஸ், கார்கோ வெரைட்டிகள் பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன. குழந்தைகளுக்கு பாபா சூட் வகைகள், கோர்ட் வெரைட்டி, லியோ சார்ட், குர்தா, கார்கோ மாடல் வெரைட்டி ஆகியவை புது ரகங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளன.

புள்ளிங்கோவின் விருப்பத்திற்கு ஏற்ப பளிச்சென்று அடிக்கும் பல வண்ணக் கலர்களில் ஷர்ட், பேண்ட், டி-ஷர்ட், லோயர், சாட் ஆகியவையும் விற்பனைக்கு வந்துள்ளன. வேட்டி சேட்டைகளை பிரதானமாக விற்பனை செய்யும் நிறுவனங்கள், தங்கள் விற்பனையை அதிகரிக்க காம்போ ஆபரை வழங்கி உள்ளன. மேலும், ஆண்களுக்கான தீபாவளி கலெக்‌ஷனில் பாப் கார்ன் பேப்ரிக்ஸ் வகையில் ஸ்ட்ரிப், பாக்ஸ், பிரிண்ட் சர்ட்டுகள் ரூ.400 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோன்று, வேபிள் பேப்ரிக்ஸ் கலெக்‌ஷன் ரூ.400 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் கப்பன் கலர் சர்ட்டுகளில் விதவிதமான டிசைன்களில் விற்பனைக்கு வந்துள்ளன ஜியூட் பேப்ரிக் சர்ட்டுகளில் புதிய வெரைட்டி கலர்கள் ரூ.500 முதல் ரூ.1200 வரை விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக பார்ட்டி வியர், பேக்கி சட்டைகள், விதவிதமான சேக்டு சட்டைகள் போன்றவை புதிய வரவுகளாக இந்தாண்டு தீபாவளிக்கு வந்துள்ளன. அதேபோன்று, பேக்கி, ஜாக்கர், டோன் ஜீன்ஸ், டைலர் ஃபிட் போன்ற பேண்ட் வகைகளில் கடைகளில் வரவுகள் பட்டியலில் அசத்துகின்றன. இதன் மதிப்பு குறைந்த பட்சமாக ரூ.800 முதல் ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. தங்களுக்கு பிடித்த ஆடைகளை எடுக்க ஜவுளி கடைகளில் குவிந்து வருவதால் ஜவுளி கடைகள் அனைத்தும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகின்றன.

* சலுகைகளை கண்டு ஆன்லைனில் ஏமாறுகின்றனர்
துணிக்கடை நடத்தி வரும் உரிமையாளர் சண்முகம் என்பவர் கூறியதாவது: தீபாவளி பண்டிகைக்கு ஏராளமான வெரைட்டி மற்றும் கலெக்‌ஷன்ஸ் சென்னையில் உள்ள ஜவுளி கடைகளை அலங்கரித்துள்ளது. காலத்திற்கு ஏற்ப மக்களின் எண்ணங்களும், ரசனைகளும் மாறி விட்டன. அதேபோன்று நாங்களும் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான புதிய வகைகளை இறக்குமதி செய்கிறோம். தற்போது இந்தாண்டின் புதிய வரவாக உள்ள பேக்கி சர்ட்கள், ஓவர் சைஸ் டி சர்ட், டெனிம் கிளாத் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனையாகிறது. அதேபோன்று, எங்களது வியாபாரம் என்பது தீபாவளி முதல் வாரத்தில் இருந்து தான் தொடங்கும்.

அதன்படி, வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ற பல துணி ரகம், கலர், சைஸ், டிசைன் உள்ளிட்டவைகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். தரமான பொருட்களை பொதுமக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால், ஆன்லைன் போன்ற சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி சிலர் ஏமார்ந்து விடுவதை பார்க்க முடிகிறது. ஆன்லைனில் எடுக்கும் பொருட்கள் தரமானதாக இருக்குமா என்பதை பற்றி சிந்திக்காமல் சலுகைகளை பார்த்து வாடிக்கையாளர்கள் ஏமாந்து விடுகின்றனர். எனவே பொதுமக்கள் நேரில் வந்து வாங்கினால் தான் அந்த துணி தரமானதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

The post தீபாவளி வந்தாச்சு… கலர் கலரா வந்து இறங்கியாச்சு புது கலெக்‌ஷன்ஸ்: களைகட்டும் ஜவுளி வியாபாரம் appeared first on Dinakaran.

Related Stories: