ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் கால்நாட்டு விழா

கோவில்பட்டி, அக். 27: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடங்குவதை முன்னிட்டு நேற்று கால்நாட்டு விழா நடந்தது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் பங்குனி பெருந்திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆகியவை வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று கோயில் முன்பு கால்நாட்டும் விழா நடந்தது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, உறுப்பினர்கள் திருப்பதி ராஜா, சண்முகராஜ், நிருத்தியலட்சுமி, ரவீந்திரன், செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, ஆய்வாளர் பிரியா, எழுத்தர் மாரியப்பன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 29ம்தேதி அம்பாள் சன்னதி முன்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து வரும் நவம்பர் 9ம்தேதி வரை 12 நாட்கள் திருவிழா நடக்கிறது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. 9ம் திருநாளான வரும் 6ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 12ம் திருநாளான 9ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொள்கின்றனர்.

The post ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் கால்நாட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: