தித்திக்கும் தீபாவளி… ஸ்வீட் எடு…கொண்டாடு… ரகரகமான இனிப்புகள்; திகட்ட திகட்ட பலகாரங்கள்

* சிறப்பு செய்தி
தீபாவளி என்றாலே புத்தாடையும் பலகாரங்களும்தான் நினைவுக்கு வரும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் நரகாசுரனை, கிருஷ்ணன் வதம் செய்த நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதேநேரம், வட இந்தியாவை பொறுத்தவரையில் வனவாசத்தை முடித்துக் கொண்டு அயோத்தியில் ராமர் கால்வைத்த நாளன்று தீப விளக்குகளால் வீடுகளை அலங்கரித்துக் கொண்டாடியதை தீபாவளியாக கொண்டாடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமணர்களை பொறுத்தவரையில் மகாவீரர் மோட்சம் அடைந்த நாள் மற்றும் சீக்கியர்களின் குருவான குருநானக் பிறந்தநாள் ஆகியவற்றை தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர்.

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 12ம் தேதி வர உள்ளது. தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் முடிந்தவுடன் புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பது என்பது வழக்கமாக உள்ள நடைமுறை ஆகும். இதன்பின்னர், வீட்டில் செய்த பலகாரங்களை உறவினர்களுக்கும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொடுத்து மகிழ்வது தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. தீபாவளி பண்டிகைக்காக வீட்டில் இனிப்பு, கார வகைகள் செய்வது காலப்போக்கில் மறைந்து கொண்டே வருகிறது. அதாவது குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு முன்பே வீடுகளில் அதிரசம், முறுக்கு, முந்திரி கொத்து போன்ற பலகார வகைகளை செய்து வைப்பது வழக்கம்.

இது தான் காலம் காலமாக இருந்து வந்தது. இப்போது கிராமங்களில் ஒருசிலர் பலகாரங்களை செய்தாலும் 90 சதவீதம் பேர் வீடுகளில் பலகாரம் செய்வதில்லை. அதற்கு முக்கிய காரணம் வேலைப்பளு மற்றும் இந்த தலைமுறையினருக்கு பலகாரங்கள் தயாரிக்கும் முறையே பெரிதாக தெரிவதில்லை என்பதே என்று கூறலாம். வீட்டில் பலகாரம் செய்யும் கலாசாரம் மாறி தற்போது ஸ்வீட் ஸ்டால்கள், பண்டிகைக்கால பலகாரக் கடைகளில் தீபாவளி பலகாரங்கள் வாங்குவது என்பது அதிகரித்துவிட்டது. தீபாவளிக்கு இன்னும் 15 நாட்கள் தான் உள்ளது. இதனால், கடைசி நேர நெரிசலை தவிர்க்கும் வகையில் இனிப்பகங்களிலும், பலகாரக் கடைகளிலும் பொதுமக்கள் தீபாவளி பலகாரங்களுக்கு ஆர்டர் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

அதே நேரத்தில் மக்களை கவரும் வகையில் தீபாவளி பண்டிகைக்காக வித, விதமான பலகாரங்கள் இந்தாண்டு சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை வலம் வர உள்ளது. அதே நேரத்தில் சென்னையில் பெரிய இனிப்பகளில் வகை, வகையான பெங்காலி இனிப்புகள், உலர் பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட இனிப்புகள், நெய் சுவீட், பால் சுவீட் என்று என்று விதவிதமான சுவீட்கள் விற்பனைக்காக வந்துள்ளது. பெங்காலி இனிப்புகள் கால் கிலோ ரூ.175, அரைகிலோ ரூ.350, 750 கிராம் ரூ.525, 1 கிலோ ரூ.700 என்ற வகையில் விற்பனை செய்யப்படுகிறது. உலர் பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட சுவீட்கள் 250 கிராம் ரூ.350, 500 கிராம் ரூ.700, 750 கிராம் ரூ.1050 என்ற விலையில் விற்கப்படுகிறது.

நெய் சுவீட்கள் 250 கிராம் ரூ.175, 500 கிராம் ரூ.350, 750 கிராம் ரூ.525, 1 கிலோ ரூ.700 எனவும் மில்க் சுவீட் கால் கிலோ ரூ.188, அரைகிலோ ரூ.275, கிலோ ரூ.750 வரையிலும், சுவீட்ஸ் 150 கிராம் ரூ.105, 250 கிராம் ரூ.175, 500 கிராம் ரூ.280, 750 கிராம் ரூ.525, 1 கிலோ ரூ.700 எனவும் விற்ப்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, பக்லவா சுவீட் ரூ.1050, உலர் பழங்கள் சுவிட் ரூ.1400, அங்குர் ஜாமூன் ரூ.700, ஆப்பிள் ரசகுலா ரூ.700, உலர் பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட சுவீட் கிலோ ரூ.1400 முதால் ரூ.1600 வரையும், கேசியோ அல்வா ரூ.900க்கும் விற்கப்படுகிறது. அதிரசம் 1 கிலோ ரூ.660, பாதுசா ரூ.700, லட்டு வகைகள் ரூ.700, ஸ்பெஷல் லட்டு ரூ.720, கேரட் அல்வா 700, ரூ.700, ஜாங்கிரி ரூ.700, ஜிலேபி ரூ.700, மைசூர் பா கிலோ 700 என விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறுத்து வடபழனி ஏ2பி மேலாளர் பால்ராஜ் கூறுகையில், ‘தீபாவளி போது வழக்கமாக விற்பனை அதிகமாக இருக்கும், குறிப்பாக நெய் மற்றும் பால்வகைகள் ஆகியவற்றால் செய்யப்படும் சுவீடை மக்கள் அதிகமாக விரும்பி வாங்குகின்றனர். சில மக்கள் நட்ஸ், சுவிட், காரம் கலந்து வாங்குகின்றனர். இதை தவிர கிபிட் ஹம்ப்பர் (gift hamper) என்று தனியாக உள்ளது, ஆர்டர் அடிப்படையில் வழங்கி வருகிறோம் தனியாக கேட்டாலும் அவர்களுக்கு ஏற்றார் போல் அளித்து வருகிறோம்’ என்றார்.

* ஸ்வீட் விலை அதிகரிப்பு
ஆண்டு தோரும் சுவீட் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக பால் மற்றும் நெய் விலை ஏற்றம் காரணமாக சுவீட் விலை அதிகரிக்கிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கலவை சுவீட் விலை 20 ரூபாய் அதிகரித்து உள்ளது. உலர் பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட சுவிட்கள் விலை 100 ரூபாய் அதிகரித்து உள்ளது.

* அதிகரித்து வரும் கிப்ட் ஹேம்பர்
சுவீட் மற்றும் காரம் என தனி தனியாக வாங்கு பரிசளிப்பது தற்போது குறைந்து வருகிறது அதற்குப்பதிலாக கலவையான சுவீட் மற்றும் காரம் என அனைத்தும் ஒரே பெட்டகத்தில் கிடைக்கும் கிப்ட் ஹேம்பர் விற்பனை அதிகரித்துள்ளது. ஒவ்வொருவருக்கும் ஏற்றார் போல் இனிப்பு மட்டும் அல்லது இனிப்பு காரம் அல்லது காரம் மட்டும் அல்லது உலர் பழங்கள் மட்டும் என தனித்தனியாக அவர்களில் விருப்பத்துக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிபிட் ஹம்ப்பர் குறைந்தப்பட்சம் ரூபாய் 650 தொடங்கி 2000 ரூபாய் வரை உள்ளது.

* பாரம்பரிய தீபாவளி பலகார விற்பனை
பெங்காலி சுவீட், நெய் மற்றும் பால் சுவீட் தவிர தமிழ் பாரம்பரிய பலகார விற்பனையும் அதிகரிக்கும், குறிப்பாக தேன் குழல் முறுக்கு, அதிரசம், மணகோலம், மாவு உருண்டை, சீடை, சீப்பு சீடை, தட்டை, கை முறுக்கு, பெரண்டை முறுக்கு, மாவு உருண்டை, காரா பூந்தி, மிக்சர், ஜாங்கிரி உள்ளிட்ட பல்வேறு பலகாரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

The post தித்திக்கும் தீபாவளி… ஸ்வீட் எடு…கொண்டாடு… ரகரகமான இனிப்புகள்; திகட்ட திகட்ட பலகாரங்கள் appeared first on Dinakaran.

Related Stories: