மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு அரசு பள்ளி மாணவன் தேர்வு: 14 வயதிலேயே பதக்கங்களை குவித்து அசத்தல்

தமிழ்நாட்டில் தற்போது அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளமாக இல்லாமல் பெருமையின் அடையாளமாக மாறி வருகிறது. கல்வியிலும், விளையாட்டிலும் மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தியும் வருகிறது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் கல்வி, தனித்திறன், விளையாட்டு போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். அதன்படி, ஒரு அரசு பள்ளி மாணவன் நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்து வருகிறான்.

திருவள்ளூர் ஜெயா நகரை சேர்ந்த சதீஷ்குமார் – உஷாராணி தம்பதியின் மகன் சஞ்சய் (14), திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே, ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு நீச்சலில் ஆர்வம் இருப்பதை அறிந்த பெற்றோர், லோகேஷ்குமார் என்ற பயிற்சியாளரை நியமித்து, நீச்சல் பயிற்சி கொடுத்துள்ளனர். கடந்த 2 வருடங்களாக காலை நேரத்தில் 3 மணி நேரமும், மாலை நேரத்தில் 3 மணி நேரமும் என தினசரி 6 மணி நேரம் சஞ்சய் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில், 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் பிரிவில் 2 சில்வர் பதக்கங்களை வென்றார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற போட்டியில் 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆர்டிஎஸ் என்ற பள்ளி அளவிலான நீச்சல் போட்டியில் பிரீஸ்ட்ரோக் பிரிவில் 50 மீட்டர் போட்டி மற்றும் 100 மீட்டர் போட்டியிலும், ப்ரீ ஸ்டைல் பிரிவில் 50 மீட்டர் போட்டியிலும் தங்கம் வென்று சஞ்சய் சாதனை படைத்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாவட்ட அளவில் பொன்னேரியில் உள்ள ஆர்.எம்.கே.பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டியில் 14 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் தனிப்பட்ட சாம்பியன்ஷிப் வென்று சாதனை படைத்துள்ளார்.

தொடர்ந்து, கடந்த 7ம் தேதி ஸ்கூல் கேம் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் திருநெல்வேலியில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 50 மீட்டர் பிரிவில் மாநில அளவில் 2ம் இடம் பிடித்து தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அதற்கான ஆணையை பள்ளியின் தலைமை ஆசிரியர் முரளிதரனிடம் காண்பித்து மாணவன் சஞ்சய் வாழ்த்து பெற்றார். அப்போது பேசிய தலைமை ஆசிரியர், சஞ்சய் போல் மாணவர்கள் அனைவரும் தங்களுக்குள்ள திறமைக்கேற்ப பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும், என்றார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் வரும் நவம்பர் மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக, திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பிரேம்குமார் வாழ்த்து தெரிவித்தார். மேலும் திருவள்ளூர் மாவட்ட நீச்சல் குளத்தில் அரசு பள்ளி மாணவர்கள் ஏழை மாணவர்கள் இதுபோல் நீச்சல் பயிற்சி எடுத்து வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தேசிய அளவிலான போட்டிக்கு சஞ்சய் தீவிரமாக தயாராகி வருகிறார்.

* ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியம்
மாணவன் சஞ்சய் நீச்சல் போட்டியில் ரோல் மாடலாக நினைப்பது ஏடன்பிட்டி மற்றும் மைக்கேல் பிலிப்ஸ் ஆகிய இருவரையும் தான். அவர்களை வென்று, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியம் என்றும், ஏடென்பிட்டி, மைக்கேல் பிலிப்ஸ் ஆகியோருக்கு ஈடு கொடுத்து அவர்களையே வெல்ல வேண்டும், என மாணவன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

* வெற்றி நமதே
என்றுமே பிரச்னைகளை கண்டு பயம் கொள்ளாதீர்கள். உங்களை அச்சுறுத்தும் பிரச்னைகளை தெளிவுபடுத்துங்கள். அந்த பிரச்னையின் பின்புலத்தை கண்டறியுங்கள். இதன்மூலம் உண்மையான பிரச்னை என்னவென்பதை புரிந்து கொள்ளுங்கள். அதை சரி செய்ய உங்களிடம் என்னென்ன தீர்வுகள் உள்ளன என்பதை பட்டியலிடுங்கள்.

பட்டியலிலுள்ள ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை ஆராயுங்கள். அதில் சிறப்பான தீர்வை தருவதை தேர்ந்தெடுங்கள். தேர்ந்தெடுத்த தீர்வை செயல்படுத்துங்கள். அந்த தீர்வு சரியாக செயல்படுகிறதா என்பதை கண்காணியுங்கள். இல்லாவிடில் மாற்றுத் தீர்வுடன் தயாராக இருங்கள். அதன்மூலம் உங்கள் வெற்றியை உறுதிப்படுத்துங்கள்.

* நாட்டுக்கு பெருமை சேர்ப்பான்
மாணவன் சஞ்சயின் பெற்றோர் கூறுகையில், ‘‘எங்களது மகன் தேசிய அளவிலான போட்டிக்கு தீவிர பயிற்சி பெற்று வருகிறான். பள்ளி தலைமை ஆசிரியர் முரளிதரன் மற்றும் வகுப்பு ஆசிரியர் குமாரி மற்றும் அனைத்து ஆசிரியர்களும், சக மாணவர்களும் நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள். இதனால் வருங்காலத்தில் சர்வதேச அளவில் நடைபெறும் நீச்சல் போட்டிகளில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பான். அவனது வெற்றிக்கு எங்களால் எவ்வளவு முடியுமோ அதனை நிச்சயம் செய்வோம்,’’ என்றனர்.

The post மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு அரசு பள்ளி மாணவன் தேர்வு: 14 வயதிலேயே பதக்கங்களை குவித்து அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: