கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக வேருடன் அகற்றப்பட்ட மரம் ஏரிக்கரையில் நடப்பட்டது

துரைப்பாக்கம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணிக்காக, சாலையோரம் உள்ள மரங்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள், மின் கம்பங்கள், மின் மாற்றிகள் போன்றவற்றை மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை முதல் ஈஞ்சம்பாக்கம் வரை சாலையோரம் உள்ள மரங்களை அகற்றுவதற்காக, மாவட்ட பசுமை குழுவிடம் கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒப்புதல் பெறப்பட்டது. இதில், சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக உள்ள 97 மரங்களை அகற்றுவதற்கும், அந்த மரங்களை மறுநடவு செய்யவும், விரிவாக்க பணி முடிந்ததும், அதே பகுதியில் மரக்கன்றுகளை வைக்கவும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி அகற்றப்பட்ட 97 மரங்களை மறுநடவு செய்யும் பணியின் தொடக்கமாக ஒரு அரச மரத்தினை நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பொக்லைன் இயந்திரம் மற்றும் கிரேன் மூலம் வேருடன் அகற்றப்பட்டு, லாரியில் எடுத்துச்சென்று, சென்னை மாநகராட்சி 15வது மண்டலத்திற்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் ராமன் தாங்கல் ஏரிக்கரை பகுதியில், அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ தலைமையில் மறுநடவு செய்யப்பட்டது. நிகழ்வின்போது 15வது மண்டல குழு தலைவர் மதியழகன், மாமன்ற உறுப்பினர் சங்கர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வநம்பி, உதவி கோட்ட பொறியாளர்கள் தீபக், செந்தில், மாநகராட்சி செயற்பொறியாளர் பத்மநாபன், உதவி செயற்பொறியாளர் மோகன், 15வது மண்டல் அதிகாரி ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக வேருடன் அகற்றப்பட்ட மரம் ஏரிக்கரையில் நடப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: