சூலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 ஈரானிய வம்சாவளியினர் கைது

*5 பவுன் தங்க சங்கிலிகளை மீட்ட போலீசார்

சூலூர் : கோவை சூலூரில் மூதாட்டியிடம் நடந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக ஈரானிய வம்சாவளியை சேர்ந்த 2 பேரை சூலூர் போலீசார் கைது செய்தனர். கோவை சூலூர் பகுதியில் உள்ள ஜெர்மன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி அம்மாள் (74). இவர் கடந்த 1ம் தேதி காலை 6 மணி அளவில் வீட்டிற்கு வெளியே வாசலில் சுத்தம் செய்து வாசல் தெளித்து கொண்டு இருந்துள்ளார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ஈஸ்வரி அம்மாள் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி விட்டனர். இது தொடர்பாக ஈஸ்வரி அம்மாள் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் செட்டிப்பாளையம் காவல் நிலைய பகுதியில் கல்லூரி மாணவர் கௌசிக் என்பவரிடம் 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களும் சூலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களும் ஒரே சாயலில் இருந்ததால் இரண்டு சம்பவத்திலும் ஒரே குழுவினர் ஈடுபட்டது தெரியவந்தது. செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

சூலூர் பகுதியில் காவல் துறை சார்பில் புதிதாக 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் இருந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல் ஆய்வாளர் மாதைய்யன் தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டுபிடித்து தேடி வந்தனர். இந்நிலையில், குற்றவாளிகள் சூலூர் அருகே கலங்கல் பகுதியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் பிடிபட்ட இருவரும் சூலூர் மற்றும் செட்டிப்பாளையம் பகுதியில் நடந்த செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்பு கொண்டனர். மேலும் இவர்கள், ஈரான் வம்சாவளியினர் என தெரிய வந்துள்ளது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் செம்பட்டி பகுதியில் தங்கி உள்ள ரயாத் அலி மகன் யோனேஷ் உசேன் (22) மற்றும் அவருடைய மைத்துனர் ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தை சேர்ந்த அப்பாஸ் அலி என்பவரது மகன் மொகல் ஜாபர் (21) என்பதும் இவர்கள் ஈரான் நாட்டை சேர்ந்த வம்சாவளியினர் எனவும் தெரிவித்தனர்.

இவர்கள் ஈரானில் இருந்து வந்து ஆந்திராவில் குடி பெயர்ந்து இன்றளவும் தங்கி வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் இவர்கள் இருவர் மீதும் திண்டுக்கல், பெருந்துறை, சேலம் போன்ற பல காவல் நிலையங்களில் மொகல் ஜாபர் மீது 10 வழக்குகளும், யோனேஷ் உசேன் மீது 18 வழக்குகளும் உள்ளதாக தெரிவித்தனர். அவர்களிடமிருந்து சூலூர் மற்றும் செட்டிப்பாளையம் பகுதிகளில் பறித்து சென்ற 5 பவுன் தங்க சங்கிலிகளை மீட்ட போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சூலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 ஈரானிய வம்சாவளியினர் கைது appeared first on Dinakaran.

Related Stories: