திருவாடானை,அக்.9: திருவாடானையில் காமராஜர் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் 200க்கும் மேல் அதிகமாக வந்து செல்கின்றன. மேலும் திருச்சி-ராமேஸ்வரம் செல்லும் பேருந்துகள் மதுரை-தொண்டி செல்லும் பேருந்துகள் மற்றும் பிரசித்தி பெற்ற பாகம் பிரியாள் அம்மன் ஓரியூர் புனித அருளானந்தர் பாசிப்பட்டினம் தர்கா ஆகிய முக்கிய ஸ்தலங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் தினமும் இப்பேருந்து நிலையம் வழியாகத்தான் செல்கிறது.
சென்னை,கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் இப்பேருந்து நிலையம் எப்போதும் மக்கள் கூட்டமாக காணப்படும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பேருந்து நிலையத்தில் பேருந்து கால அட்டவணை இல்லை. இதனால் வெளியூருக்கு செல்லும் பயணிகள் எந்த நேரத்திற்கு பேருந்து எந்த ஊருக்கு செல்கிறது என தெரியாமல் சிரமப்படுகின்றனர். பொதுமக்கள் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து கால அட்டவணை வைக்கப்பட்டிருந்தது.
அது வெளியூர் செல்லும் மக்களுக்கு உதவியாக இருந்தது. தற்போது இங்கு அப்படி எதுவும் வைக்கப்படவில்லை. மேலும் பகல் நேரத்தில் டைம் கீப்பர் மற்றும் தனியார் பஸ் ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்களிடம் பேருந்து வரும் நேரத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இரவு நேரத்தில் அவர்கள் யாரும் இருப்பதில்லை. இதனால் பயணிகள் பெரிதும் குழப்பம் அடைகின்றனர். எனவே முக்கியமான இந்த பேருந்து நிலையத்தில் பேருந்து கால அட்டவணை அவசியம் வைக்க வேண்டும் என்றனர்.
The post திருவாடானை பஸ் ஸ்டாண்டில் பேருந்து கால அட்டவணை வைக்க வேண்டும்: பயணிகள் வேண்டுகோள் appeared first on Dinakaran.
