உலக கோப்பை முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து: ரவிந்திரா, கான்வே அதிரடி சதம்

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது. நியூசிலாந்து அணியின் டேவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவிந்திரா அபாரமாக ஆடி சதம் அடித்தனர். ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடர் நேற்று தொடங்கியது. அகமதாபாத்தில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை நியூசிலாந்து எதிர்கொண்டது. டாம் லாதம் தலைமையிலான நியூசி அணியில் வில்லியம்சன், டிம் சவுத்தீ, லாக்கி ஃபெர்குசன், ஜோஸ்பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் காயம் காரணமாக களம் காணவில்லை.

டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார். டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே இந்த உலக கோப்பையின் முதல் சிக்சர், முதல் பவுண்டரி அடித்து கணக்கை தொடங்கினார் பேர்ஸ்டோ. வாய்ப்பு கிடைக்கும் போது ரன் குவித்த இருவரும் முதல் விக்கெட்டுக்கு 40ரன் சேர்த்தனர். முதலில் டேவிட் மாலன் 14 ரன்னில் வெளியேற தொடர்ந்து பேர்ஸ்டோ 33, ஹாரி புரூக் 25, மொயீன் அலி 11 ரன்னில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு ஜோ ரூட் உடன் இணை சேர்ந்த கேப்டன் பட்லர் பொறுப்புடன் விளையாட ஆரம்பிக்க ஸ்கோர் உயர்ந்தது.

இருவரும் 5வது விக்கெட்டுக்கு 70ரன் குவித்தனர். பட்லர் 42பந்துகளில் 43ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த லிவிங்ஸ்டோன் 20ரன்னில் நடையை கட்டினார். நீண்ட நேரம் தாக்குப்பிடித்த ஜோ ரூட் அரைசதமும் விளாசி 77ரன்னில் வெளியேறினார். அடுத்து கிறிஸ் வோக்ஸ் 11, சாம் கரன் 14ரன்னில் பெவிலியன் திரும்பினர். அப்போது இங்கிலாந்து 45.4 ஓவருக்கு 9 விக்கெட்களை இழந்து 252ரன் சேர்த்திருந்தது. கடைசி வரை களத்தில் இருந்த அடில் ரஷித் 15, மார்க் வுட் 13ரன் விளாசி கடைசி விக்கெட்டுக்கு 30ரன் சேர்த்தனர். அதனால் இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 282ரன் குவித்தது.

நியூசி தரப்பில் ஹென்றி 3, பிலிப்ஸ் , சிக்னமாக பந்து வீசிய சான்ட்னர் ஆகியோர் தலா 2, போல்ட், ரவீந்திரா ஆகியோர் ஒரு விக்கெட் எடுத்தனர். இதில் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் 5விக்கெட்களை அள்ளினர். அதனையடுத்து 283ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசி விளையாடத் தொடங்கியது. தொடக்க வீரர் விங் யங் ஆட்டத்தின் 2வது ஓவரில் கரண் வீசிய முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின் ஜோடி சேர்ந்த கான்வே, ரச்சின் ரவிந்திரா இங்கிலாந்து பந்து வீச்சை பந்தாடினர்.

நாலாபுறமும் பந்தை பறக்க விட்ட கான்வே 83 பந்திலும், ரவிந்திரா 82 பந்திலும் சதம் அடித்து இங்கிலாந்தை துவம்சம் செய்தனர். இங்கிலாந்தின் எந்த பந்துவீச்சாளராலும் இந்த ஜோடியின் அதிரடிக்கு அணை கட்ட முடியவில்லை. இறுதியில் நியூசிலாந்து அணி 36.2 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 283 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கான்வே 121 பந்தில் 152 ரன்னுடனும் (3 சிக்சர், 19 பவுண்டரி), ரவிந்திரா 96 பந்தில் 123 ரன்னுடனும் (5 சிக்சர், 11 பவுண்டரி) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

The post உலக கோப்பை முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து: ரவிந்திரா, கான்வே அதிரடி சதம் appeared first on Dinakaran.

Related Stories: