நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது உள்பட இந்தியாவிடம் ஏராளமான திட்டங்கள் உள்ளன: சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பேட்டி

சென்னை: சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள லியோ முத்து உள்விளையாட்டு அரங்கில் சந்திரயான் 3 திட்ட இயக்குனரும், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவருமான வீரமுத்துவேலுக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது. இதில், ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பல ஆண்டுகளுக்கு பிறகு கல்லூரியில் படித்த எனது நண்பர்களையும் சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. விண்வெளி துறையில் இந்தியாவிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இன்ஜினியரிங் மாணவர்கள் எந்த பிரிவில் படித்தாலும் அவர்களுக்கு நிச்சயமாக சிறந்த எதிர்காலம் உள்ளது. மாணவர்கள் லட்சியத்துடன் படித்து முன்னேற வேண்டும்.

அரசு வேலைகள் மற்றும் அறிவியல் ஆய்வுகளில் தென்னிந்தியர்களை விட வட இந்தியர்கள் அதிக அளவு வேலையில் உள்ளனர். வட இந்தியர்கள் தேர்வில் தோல்வியடைந்தாலும் மீண்டும், முயற்சி செய்து தொடர்ந்து தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று, அரசு பணிகளை பெறுகின்றனர். ஆராய்ச்சி பணிகளிலும் அதிக அளவு உள்ளார்கள். தென்னிந்தியர்களை பொறுத்தவரை ஒரு முறை தோல்வி அடைந்தால் அவர்கள் தொடர்ந்து, முயற்சி செய்யாமல் வேறு துறைகளுக்கு சென்று விடுகிறார்கள். அதற்கு பெற்றோர்களும் ஒரு காரணமாக உள்ளார்கள்.

தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெறலாம் அதை தென்னிந்தியர்களும் செய்ய வேண்டும். இந்தியாவில் விண்வெளித் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் எதிர்காலத்தில் செய்யப்படவுள்ளது. நிலாவுக்கு மனிதர்கள் அனுப்புவது உட்பட்ட ஏராளமான திட்டங்களை வைத்திருக்கிறார்கள் விண்வெளி துறையில் இந்தியா முன்னோடி நாடாக உள்ளது என பேசினார். இந்நிகழ்ச்சியில், ஆர்.எம்.கே கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்ஜினியரிங் மாணவர்கள் எந்த பிரிவில் படித்தாலும் அவர்களுக்கு நிச்சயமாக சிறந்த எதிர்காலம் உள்ளது.

The post நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது உள்பட இந்தியாவிடம் ஏராளமான திட்டங்கள் உள்ளன: சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: