பணி நிரந்தரம், ஓய்வூதியம் வழங்கக்கோரி 169 ஆண்டுகளாக போராடும் கிராமிய தபால் ஊழியர்கள்: தொடர்ந்து பாராமுகம் காட்டும் ஒன்றிய அரசு, நாளை 2.50 லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்


உலகின் மிக பழமையான துறைகளில் ஒன்று இந்திய தபால் துறை. இத்துறையானது நாடு முழுவதும் சுமார் 1.55 லட்சம் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இதில், சுமார் 2.90 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 312 தபால் அலுவலகங்கள் கிராமப்புறங்களில் தான் அமைந்துள்ளன. கிராமப்புறங்களில் மட்டும் 2.49 லட்சம் பேர் கிராமிய தபால் ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். கிராமப்புற தபால் அலுவலகங்களில் கிராம தபால் அலுவலர், தபால் பை எடுத்து வருபவர், விநியோகம் செய்பவர், தபால் பை பரிமாற்றம் செய்பவர், துணை தபால் உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ளோர் ஆங்கிலேயர் காலம் தொட்டு தற்போது வரை பகுதி நேர பணியாளர்களாக உள்ளனர். நகர்ப்புற அலுவலர்களை போல (நிரந்தரப் பணியாளர்கள்) கிராமிய தபால் ஊழியர்களும் அனைத்து பணிகளையும் செய்கின்றனர்.

ஆனால், அதற்கேற்ற ஊதியம் வழங்கவோ, உயர்த்தப்படவோ இல்ைல. நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ரூ.15 ஆயிரம் ஊதியம் என்ற இலக்கை அவர்களால் அடைய முடிந்தது. கடந்த 2016ல், 7வது ஊதியக்குழு கிராமிய தபால் ஊழியர்களுக்கு சாதகமான பல பரிந்துரைகள் அளித்தும் இதுவரை அமலாகவில்லை. இன்னும் இவர்களால் அரசு ஊழியர் அந்தஸ்தை பெற முடியவில்லை. கடந்த 1854ல், ஆங்கிலேயர்கள் தபால் துறையில் புறநிலை ஊழியர்கள் பிரிவை உருவாக்கினர். அந்த பிரிவு தான், கிராமிய தபால் ஊழியர்களாக பெயர் மாற்றப்பட்டுள்ளது.

தபால் பட்டுவாடா, சேமிப்புக் கணக்கு, இன்சூரன்ஸ், மின்சார கட்டணம் மற்றும் தொலைபேசி கட்டணம் வசூலித்தல், மணியார்டர் பட்டுவாடா, ரிஜிஸ்டர் புக்கிங், ஸ்பீடு போஸ்ட் புக்கிங், தேசிய வேலைவாய்ப்புத் திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட இலாகா ஊழியர்கள் செய்யக்கூடிய அனைத்துப் பணிகளையும் கிராமிய தபால் ஊழியர்கள் செய்கின்றனர். தற்போது அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய 3 கட்ட போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நாளை (அக்.4) நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டமும் நடக்கிறது. இதில் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கி பென்ஷன் உள்ளிட்ட இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும். ஊதியக்குழு பரிந்துரைப்படி பணப்பலத்துடன் கூடிய மூன்று கட்ட பதவி உயர்வு, 12, 24, 36 வருட பணிக்கு வழங்க வேண்டும். 180 நாட்கள் சேமிப்பு விடுப்பு, பணிக்கொடை ரூ.5 லட்சம், குரூப் இன்சூரன்ஸ் ரூ.5 லட்சம், மருத்துவ காப்பீடு முதலியன வழங்க ேவண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. சுமார் 2.50 லட்சம் பேர் பங்கேற்கும் போராட்டத்தால், கிளை தபால் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

* 73% வருவாய் தந்தும் பயனில்லை
இந்திய அஞ்சல் துறையின் வருவாயில் 73 சதவீத வருவாய் கிராமிய தபால் அலுவலகங்கள் மூலமே கிடைக்கிறது. கிராமிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வரை பிரீமியம் கிடைக்கிறது. இப்படி லாபம் ஈட்டித் தரும் துறை ஊழியர்களை ஒன்றிய அரசு கண்டு கொள்ளாதது வேதனைக்குரிய விஷயம்.

*உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் பணி நிரந்தரம் செய்ய மறுப்பு
அகில இந்திய கிராமிய தபால் ஊழியர்கள் சங்க மாநிலச்செயலாளர் எம்.பாஸ்கரன் கூறுகையில், ‘‘1977ம் ஆண்டு உச்சநீதிமன்றம், ஒரு வழக்கில் கிராமிய தபால் ஊழியர்களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அமலாகவில்லை. கிராமிய தபால் ஊழியர்களுக்கு 4 மணி நேரம் வேலை எனக் கூறி விட்டு தற்போது 12 மணி நேரம் வரை வேலை வாங்கப்படுகிறது. கிராமப்புற தபால் நிலையங்களில் கணினிகள், இணைய சேவை போன்ற வசதிகள் இல்லை. பணி நேரம் அதிகரிப்பால் ஊழியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதியம், பணிப் பாதுகாப்பு இல்லை. ஊதிய உயர்வு தொடர்பான கமலேஷ்சந்திரா கமிட்டி பரிந்துரையையும் செயல்படுத்தவில்லை.

சமீபத்தில் 35,000 கிராமப்புற தபால் ஊழியர்கள் இலாகா தேர்வு எழுதி ஊழியர்களாக தகுதி பெற்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கிராமப்புற தபால் அலுவலகங்களுக்கு முறையான கட்டிட வாடகை, மின்கட்டணம் கூட இந்திய தபால் துறை கொடுப்பது கிடையாது. கிராமிய தபால் ஊழியர்களே தங்கள் ஊதியத்தை பகிர்ந்து அந்த செலவினங்களை சமாளித்து வருகின்றனர். போக்குவரத்து படி, பென்சன் கிடையாது. 30 முதல் 40 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறும்போது கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு சொற்ப தொகை மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும் வறுமையில் வாடி வருகின்றனர். இதே நிலை நீடித்தால், சில ஆண்டுகளில் இந்திய தபால் துறை அழிக்கப்பட்டு ஏஜென்சிகளாக மாறும் நிலை உருவாகும்’’ என்றார்.

The post பணி நிரந்தரம், ஓய்வூதியம் வழங்கக்கோரி 169 ஆண்டுகளாக போராடும் கிராமிய தபால் ஊழியர்கள்: தொடர்ந்து பாராமுகம் காட்டும் ஒன்றிய அரசு, நாளை 2.50 லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Related Stories: