காவிரி விவகாரத்தால் கர்நாடகாவில் பந்த் 65 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்

சேலம்: காவிரி விவகாரத்தால் கர்நாடகாவில் நேற்று பந்த் நடந்ததால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், அதேபோல் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கும் வந்த 65 ஆயிரம் லாரிகள் இரு மார்க்கத்திலும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த வாரம் முதல் கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 26ம் தேதி பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கர்நாடகா முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு 40 கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதனால், தமிழ்நாடு, கர்நாடகா எல்லையில் பதற்ற மான சூழல் உருவானது.

பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பந்த் காரணமாக கர்நாடகாவில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் இருந்தும் கர்நாடகாவிற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூரு மற்றும் கர்நாடக மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும், வட மாநிலங்களுக்கும் இயக்கப்பட்ட லாரி உள்ளிட்ட வாகனங்கள், நேற்று கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், கிருஷ்ணகிரியில் சாலையோரங்களில் பெரும்பாலான லாரிகளை நிறுத்திய டிரைவர்கள், அங்கேயே ஓய்வெடுத்தனர்.

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 35 ஆயிரம் லாரிகள் கர்நாடகா வழியாக வட மாநிலங்களுக்கு செல்கிறது. இந்த லாரிகள் ஓசூர் எல்லையிலும், ஆங்காங்கேயும் நிறுத்தி வைக்கப்பட்டன. அதேபோல், வட மாநிலங்களில் இருந்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான லாரிகள், கர்நாடகா வழியே தமிழகத்திற்கு வருகிறது. அந்த லாரிகளும், பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன. குறிப்பாக சேலத்தில் இருந்து கர்நாடகா வழியாக வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய லாரிகள் சத்திரம் லாரி மார்க்கெட், கந்தம்பட்டி பைபாஸ், சீலநாயக்கன்பட்டி பைபாஸ், கொண்டலாம்பட்டி பைபாஸ் உள்பட பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதேபோல், நேற்று முன்தினம் மாலை புறப்பட்டுச் சென்ற லாரிகள், மாநில எல்லைப்பகுதியான ஓசூர், ஜூஜூவாடி, அத்திப்பள்ளி பகுதியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய லாரிகள் அனைத்தும் எல்லைப்பகுதியான நிப்பானி என்னும் இடத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக இரு மார்க்கத்திலும் நேற்று 65 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டன.

* கன்னட அமைப்புகள் போராட்டம் எல்லையில் பலத்த பாதுகாப்பு

தமிழக -கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி ஆர்ச் அருகே, கன்னட ஜாக்ருதி வேதிகே, ஜெய் கர்நாடகா ஆகிய அமைப்புகள், காவிரியில் தண்ணீர் விட எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடக அரசை கண்டித்தும், நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் சாலை மறியலில் குதித்ததால், 144 தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக 150க்கும் மேற்பட்டோரை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, தமிழக போலீசார் மாநில எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக பதிவெண் கொண்ட இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பி வைத்தனர். பல்வேறு பணி நிமித்தமாகவும், அவசர வேலையாகவும் பெங்களூரு புறப்பட்டவர்கள், மாநில எல்லையான ஜூஜூவாடிக்கு தமிழக அரசின் டவுன் பஸ்களில் சென்றனர். பின்னர், அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்று, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏறி பயணத்தை தொடர்ந்தனர். இருமாநில போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

*பண்ணாரி, கூடலூரில் தடுத்து நிறுத்தம்

சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்களை மட்டும் போலீசார் கர்நாடகா செல்ல அனுமதித்தனர். பேருந்துகள் இல்லாததால் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் பயணிகள் செல்ல முடியாமல் தவித்தனர். ஊட்டியில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

கர்நாடக மாநிலம் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் கூடலூர் மற்றும் மாநில எல்லையான கக்கநல்லா வரை செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. கூடலூர் வழியாகவும் கர்நாடகாவுக்கு தமிழ்நாட்டு வாகனங்கள் இயக்கப்படவில்லை. கேரளாவிலிருந்து கூடலூர் வழியாக கர்நாடகாவிற்குள் இயக்கப்படும் கேரளா அரசு பேருந்துகளும் நேற்று இயக்கப்படவில்லை. கோவையில் இருந்து பெங்களூருவுக்கும் பஸ்கள் இயக்கப்படவில்லை.

*தமிழக அரசு பஸ்கள் அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு 500 பஸ்கள் தினசரி இயக்கப்படுகிறது. பந்த் காரணமாக நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பெங்களூருக்கு இயக்கப்பட்ட பஸ்கள் ஓசூர் எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டது. நேற்று அங்கு பந்த் நடைபெற்றதால் சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்பட்ட பஸ்களின் கண்ணாடியில் அத்திப்பள்ளி வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டு இயக்கப்பட்டது.

அதேபோல் மற்ற ஊர்களில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட பஸ்கள் அத்திப்பள்ளி வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டது. பந்த காரணமாக சேலம்-பெங்களூர் செல்லும் பஸ்களில் பயணிகளின் வருகை சரிந்து காணப்பட்டது. பஸ்களில் சொற்ப அளவிலேயே பயணிகள் இருந்தனர். ஆனால், கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள், வழக்கம் போல ஓசூர் பஸ் நிலையத்திற்கு வந்து சென்றன.

The post காவிரி விவகாரத்தால் கர்நாடகாவில் பந்த் 65 ஆயிரம் லாரிகள் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: