ர39.83 லட்சத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் 110 டன் கொள்ளளவு பொருட்கள் இருப்பு

புதுக்கோட்டை, செப்.29: புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில், வேளாண்மை, உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், நபார்டு 2020-21 திட்டத்தின்கீழ், ரூ.39.83 லட்சம் மதிப்பீட்டில், விதை சேமிப்பு கிடங்குடன் கூடிய துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடத்தினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்துனர். பின்னர், பயனாளிகளுக்கு ரூ.64.68 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அப்போது அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனிற்காக எண்ணற்ற முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், விவசாயத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்றையதினம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ரூ.39.83 லட்சம் மதிப்பீட்டில், விதை சேமிப்பு கிடங்குடன் கூடிய துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடம் விவசாயிகளின் நலனிற்காக திறந்து வைக்கப்பட்டது.

இம்மையம் திறந்து வைப்பதன் மூலம் இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தேவையான விதைகள், வேளாண் இடுபொருட்கள், வேளாண் உபகரணங்கள் ஆகியவைகளை இருப்பு வைத்து வழங்குவதற்கும், இம்மையம் உரிய அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இம்மையம் 105.41 சதுர மீட்டர் பரப்பளவிலும், 110 மெட்ரிக் டன் கொள்ளளவிற்கு பொருட்கள் இருப்பு வைக்கும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலம் வாராப்பூர் (பிர்கா) உட்பட்ட 13 கிராம ஊராட்சிகளை உள்ளடங்கிய 13 வருவாய் கிராமங்களை சார்ந்த 5,869 விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தினால் 3348.9 எக்டர் இயல்பான சாகுபடி பரப்பு பயன்பெறும். இதன்மூலம் தமிழக அரசால் செயல்படுத்தப்படும்.

இதுபோன்ற வளர்ச்சி திட்டங்களை விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்திக்கொண்டு, பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்ததாவது;
ஆதனக்கோட்டையில், ரூ.39.83 லட்சம் மதிப்பீட்டில், விதை சேமிப்பு கிடங்குடன் கூடிய துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம் இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை சார்ந்த உதவிகள் அதிக அளவில் கிடைக்கக்கூடும். மேலும் இம்மையத்தினை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயனடைய வேண்டும். விவசாயிகள் அனைவரும் உரிய முறையில் இந்த வேளாண்மை விரிவாக்க மையத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.ேக. செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்துறை) செல்வம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post ர39.83 லட்சத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் 110 டன் கொள்ளளவு பொருட்கள் இருப்பு appeared first on Dinakaran.

Related Stories: