தஞ்சாவூர் மாவட்ட வளர்ச்சி பணிகளை சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு

தஞ்சாவூர், செப். 28: தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப் பேரவை 2023-24ம் ஆண்டுக்கான பொது கணக்கு குழு தலைவரும் எம்எல்ஏவுமான செல்வபெருந்தகை தலைமையிலான குழுவினர் தஞ்சாவூர் மாவட்ட வளர்ச்சி பணிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் பொதுக்கணக்கு குழு உறுப்பினர்களான எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, இனிகோ இருதயராஜ், ஈஸ்வரன், உதயசூரியன், கார்த்திகேயன், சேகர், பாலாஜி ஆகியோர் தஞ்சாவூர் மாவட்ட வளர்ச்சி பணிகளை நேற்று ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் சர்ஜா மாடி கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணி, அரண்மனையில் எழிலார்ந்த சிற்பங்கள், தர்பார் மண்டபத்தில் நடைபெறும் சீரமைப்பு பணி ஆகியவற்றை பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து சரஸ்வதி மகால் நூலகத்தில் காணொளிக் காட்சி அரங்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெருமைமிகு தஞ்சாவூர் பெரிய கோயில், கல்லணை உள்ளிட்ட சுற்றுலா சிறப்பிடங்களை பற்றிய காணொளிக் காட்சியை பொது கணக்கு குழுவினர் பார்வையிட்டனர்.

பின்னர் ராஜாமிரசுதார் அரசு மருத்துவமனையில் மருந்துகள் இருப்பு பிரிவு, கண் சிகிச்சை பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு, பொதுமக்களிடம் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என பொதுக் கணக்கு குழுவினர் கேட்டறிந்தனர். அதைத் தொடர்ந்து குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர மரபினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவியர் விடுதிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகளை பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை, கலெக்டர் தீபக் ஜேக்கப், பொது கணக்கு குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், பொதுக்கணக்கு குழு சார்பு செயலாளர் பாலசீனிவாசன், மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், மாநகராட்சி நல அலுவலர் சுபாஷ் காந்தி உள்பட அரசு துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

The post தஞ்சாவூர் மாவட்ட வளர்ச்சி பணிகளை சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: