அரசாங்கம் தீட்டும் எந்த திட்டமானாலும் மக்களுக்காகத்தான். மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை எந்த குறைவும் இல்லாமல் நீங்கள் நிறைவேற்ற வேண்டும். நீங்கள் எல்லோரும் அரசு ஊழியர்கள் ஆகியுள்ளீர்கள். 23ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். மூளை சாவு அடைந்தவர்கள் இறக்கும் முன் உடல் உறுப்புதானம் செய்தால் அரசு மரியாதை அடக்கம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, உடல்உறுப்பு தானம் செய்த முதல் நபர் ஒரு அரசு ஊழியர்தான். அந்த இறுதிச்சடங்கில் அமைச்சர் சுப்பிரமணியன், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவருடைய குடும்பத்தினருக்கு தனிப்பட்ட முறையில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செய்தி, உடல் உறுப்பு பற்றி பெரும் விழிப்புணர்வை நிச்சயம் வெளிப்படுத்தும்.
அரசு சிறப்பாக செயல்பட அரசு ஊழியர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். நமது அரசு இயந்திரத்தை திறம்பட செயல்பட டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ தேர்வு வாரியம், சீருடை பணிகள் தேர்வு வாரியம் ஆகியவைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால் விடைத்தான் திருத்த காலதாமதம் ஆகிறது. இதை சரிசெய்ய, விடைத்தாள்களை மதிப்பீடு செய்கின்ற முறையை எளிதாக்கவும், காலதாமதத்தை தவிர்க்கவும், அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ரூ.95 லட்சம் செலவில், ஆன்-ஸ்கிரீன் எவாலுவேஷன் லேப் என்ற உயர் தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. 20.9.2021 ஒரு குழு அமைத்து ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 74 புதிய பணியிடங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
தாய்மொழியான தமிழ்மொழி படித்தவர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழில் கட்டாய போட்டி தேர்வு நடத்த வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்களில் காலி பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுத்து, தற்போது அதற்கான பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே, வங்கி, அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஒன்றிய அரசு பணியிடங்களுக்கு தமிழ்மொழியில் தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். என்னுடைய இந்த கோரிக்கையை ஏற்று, ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் வாயிலாக, 10ம் வகுப்பு மற்றும் 12ம்ம் வகுப்பு தரத்தில், பன்முக பணியாளர் (மல்ட்டி-டாஸ்கிங்-ஸ்டாப்ஸ்) பதவிக்காக நடத்தப்படுகின்ற தேர்வை தமிழ் மொழியிலும் எழுதலாம் என்று ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதை தமிழ்நாட்டு இளைஞர்களுக்காக திமுக அரசு பெற்றுத் தந்திருக்கக்கூடிய ஒரு வெற்றியாகவே நான் கருதுகிறேன்.
என்னுடைய கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தில், கடந்த ஆண்டு 13 லட்சம் இளைஞர்களுக்கு தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் பயிற்சி பெற்ற 90 பேர், ஒருங்கிணைந்த வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட முதனிலை தேர்வில் தேர்வாகியிருக்கிறார்கள். மண்டல – ஊரக வங்கிகளில் எழுத்தர் பணிக்கான முதனிலை தேர்வில் 40 பேர் தேர்வாகியிருக்கிறார்கள். குடிமை பணி தேர்வில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறவேண்டும் என்று முதனிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,000 பேருக்கு மாதந்தோறும் ரூ.7,500 ஊக்கத்தொகையும், பயிற்சியும் வழங்குகின்ற புதிய திட்ட அக்டோபர் மாதத்தில் இருந்து இது தொடங்கப்படும்.
திமுக அரசு அமைந்த கடந்த 2 ஆண்டு காலத்தில் 12,576 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது 10,205 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டு இருக்கிறது. நடப்பாண்டில் மேலும் 17 ஆயிரம் பேருக்கு பல்வேறு அரசு பணிகள் வழங்கப்பட இருக்கிறது. அடுத்த 2 ஆண்டுகளில் பல்வேறு அரசு பணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைப்பதால், குடும்பத்துக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி தருவதோடு அரசு நிர்வாகத்துக்கு புதிய வேகத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும்.
அரசின் திட்டங்கள் பாரபட்சமில்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும். நம்முடைய அரசின் கொள்கையை அரசின் அங்கமாக இருக்கின்ற நீங்கள் எல்லோரும் மனதில் வைத்து செயலாற்ற வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் நந்தகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
* மக்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேட்க வேண்டும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘மக்கள் உங்களிடம் கோரிக்கையுடன் வரும்போதெல்லாம் என்னுடைய இன்னொரு முகமாக, என்னுடைய பிரதிநிதியாக, இந்த அரசாங்கத்தின் அலுவலராக இருக்கின்ற நீங்கள், மக்களை எளிமையாக அணுகி, அவர்கள் குறைகளையும், பிரச்னைகளையும் தீர்த்து வைத்து, அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் அவர்களிடம் சேர்த்து பயனடைய செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். ஏதோ ஒரு ஊரில், ஏதோ ஒரு ஏழையின் கண்ணீரை உங்கள் கரங்கள் துடைத்தால் அதனால் அடைகின்ற பெருமை என்னைத்தான் சேரும். அதே நேரம், யாரோ ஒருத்தர் உதாசீனப்படுத்தினால் அதனால் வருகின்ற வசவும் – திட்டும் கூட என்னைத்தான் வந்து சேரும்.
இன்று பணியாணை பெற்றிருக்கும் உங்களுக்கும், இந்த நிகழ்ச்சியின் மூலமாக அனைத்து அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை அதிகாரிகள் வரை உள்ள அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புறேன். உங்களிடம் கோரிக்கை மனுவுடன் வருகிறவர்களிடம் முதலில் உட்கார வைத்து பேசுங்கள். அவர்களுடைய பிரச்னையை, கோரிக்கையை காது கொடுத்து கேளுங்கள். அதுவே வந்தவர்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையை தரும்; மன நிறைவை தரும். உட்கார வைத்து பேசுறதுதான், சக மனிதருடைய சுயமரியாதை என்று நினைத்து அதற்கு மதிப்பு கொடுங்கள். அப்படி செய்தால், அவர்களுடைய பாதி பிரச்னை தீர்ந்து போய்விடும், பாதியளவுக்கு நிம்மதியை அடைந்துவிடுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
* 22 லட்சம் பேர் தேர்வு எழுதினர்; 10,205 பேர் தேர்வாகி உள்ளனர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டிஎன்பிஎஸ்யின் மூலம் தேர்வான 10,205 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு மாநில அரசு பணிகளில், இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற குரூப்-4ல் அடங்கிய வெவ்வேறு பதவிகளுக்கான 10,205 காலி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் நடத்தப்பட்ட போட்டி தேர்வில் சுமார் 22 லட்சம் பேர் எழுதினர். அதில் 10,205 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில், தட்டச்சர்-3,339, இளநிலை உதவியாளர்-5,278, கிராம நிர்வாக அலுவலர்-425, வரி தண்டலர்-67, புல உதவியாளர் – 19, சுருக்கெழுத்து தட்டச்சர்-1,77 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
The post டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுபெற்ற 10,205 பேருக்கு பணி ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்; 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை என அறிவிப்பு appeared first on Dinakaran.