தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் வகையில் அரசு மருத்துவமனையின் ஆன்லைன் மருத்துவ சேவை: 6 வகையான மருத்துவம் குறித்து ஆலோசனை; மக்களை தேடி மருத்துவம் மூலமாக சிகிச்சை அளிக்க திட்டம்

* சிறப்பு செய்தி
ஒரு நிகழ்வோ அல்லது செய்தியோ கடல் கடந்து வேறொருவரிடம் சென்றடைய நாள்கள், மாதங்கள், ஆண்டுகள் என இருந்த காலமெலாம் ஓடோடி போய் தற்போது நொடிப்பொழுதில் பல்லாயிரக்கணக்கான மைல்களை கடந்து வந்தடைகின்றன. ஒருவர் வீட்டில் நடக்கும் நிகழ்வு அவரது அண்டை வீட்டாருக்கு தெரியும் நேரத்தில், எங்கேயோ வேறு கண்டத்தில் இருப்பவருக்கும் தெரிய வரும் அளவுக்கு நமது தொழில்நுட்ப வளர்ச்சி தகவல் தொலைத்தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை சரியாக பயன்படுத்தி பல்வேறு வகையான நல்ல விஷயங்களை செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கொரோனா காலத்தில் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. கொரோனா வீரியமாக பரவிக்கொண்டு இருந்த காலத்தில் மருத்துவர்கள் இணைய வழியாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வந்தனர். இதனால் பல்லாயிரம் பேர் பயனடைந்தனர். கிராமப்புற, நகர்ப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில்‌ வாழும்‌ மக்கள்‌, வயதானவர்கள்‌, நடமாடுவதில்‌ சிரமம்‌ உள்ளவர்கள்‌, பணி மற்றும் பொருளாதார சுமை உள்ளவர்கள்‌ மருத்துவமனைக்கு வந்து மருத்துவ ஆலோசனை பெறுவதில்‌ பல சிரமங்கள்‌ உள்ளன.

தற்போதைய நவீன தொலைதொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி காலகட்டத்தில்‌ இணைய வழி மருத்துவ சேவை மூலம் வீட்டில்‌ இருந்தபடியே மக்கள் மருத்துவ ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் மக்களுக்கு ஆன்லைன் சேவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையை கடந்த மாதம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 12 மணி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம், முதியோர் நல மருத்துவம் மற்றும் தோல் நோய் மருத்துவம் ஆகிய துறைகளை சார்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், நோய்த்துறையின் இணை பேராசிரியருமான மது கூறியதாவது: சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இணைய வழி மருத்துவ சேவை மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் அதற்கான இணைப்பை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும். அதன் பின்னர் நாங்கள் தரும் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் உள்ளே செல்லலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். கிட்டத்தட்ட 6 வகையான மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ ஆலோசனை வழங்கும் அனைத்து மருத்துவர்களும் 20 முதல் 30 வருடம் அனுபவம் உள்ள மருத்துவர்கள்.

தற்போது வரை ஒரு நாளுக்கு 5 முதல் 6 அழைப்புகள் வருகிறது ஆனால் 3 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 30 நபர்களுக்கு வரை ஆலோசனை வழங்கலாம். மக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடந்த ஒரு மாதமாக காய்ச்சல் தொடர்பாக அதிக அழைப்புகள் வந்து உள்ளது. மேலும் இங்கு சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்றவர்களும் அதிக அழைப்புகள் வந்துகொண்டு உள்ளது. தற்போது மழைக்காலம் வருவதால் குழந்தைகள் தொடர்பாக மருத்துவ ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு வர கூறினார்.

முன்னதாக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது: இணைய வழி மருத்துவ சேவை இலவசமாக மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மக்களை இதனை பயன்படுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த திட்டத்தை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவம் பணியாளர்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம். அதுமட்டுமின்றி இணைய வழி மருத்துவ ஆலோசனை வழங்கிய பிறகு மக்களை தேடி மருத்துவம் பணியாளர்கள் மூலம் சிகிச்சை அளிக்கவும் திட்டமிட்டு உள்ளோம். நேரடியாக அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை சந்திக்க நேரம் கிடைக்காமல் உள்ளது ஆனால் இணைய வழியாக எளிதில் ஆலோசனை பெற முடியும். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் எங்கு இருந்து அழைத்தாலும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

* இலவச இணையவழி சேவை
இணைய வழி மருத்துவ சேவைகளை பொதுமக்கள் பெற https://teleconsultation.s10safecare.com என்ற வலைதளத்தில் சென்று அங்கு முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இதனையடுத்து பதிவு செய்தோருக்கு மருத்துவர்கள் சார்பில் அழைக்கப்பட்டு வீடியோ கால் மூலமாக மருத்துவ சேவை வழங்க வழிவகுக்கப்பட்டுள்ளது.

* மருத்துவர்கள் எதிர்பார்ப்பு
காணொலி காட்சி மூலமாக மருத்துவர்களிடம் நோயாளிகள் தங்களுடைய பிரச்சனைகளை கூறி அதன் மூலம் ஆலோசனை பெற்றுக்கொள்ளும் திட்டம் வெளிநாடுகளில் அதிமாக உபயோகித்து வருகின்றனர். அதேபோல, தனியார் மருத்துமனைகளில் ஆன்லைன் மூலம் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற ஆயிரக்கணக்கில் செலவிடவேண்டியுள்ளது. ஆனால், சுகாதாரத்துறை தரப்பில் இலவசமாக இத்திட்டம் மூலம் மக்களுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இருப்பினும், மக்கள் இத்திட்டத்தில் இணைந்து பயனடைய வேண்டும் என மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் வகையில் அரசு மருத்துவமனையின் ஆன்லைன் மருத்துவ சேவை: 6 வகையான மருத்துவம் குறித்து ஆலோசனை; மக்களை தேடி மருத்துவம் மூலமாக சிகிச்சை அளிக்க திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: