கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் 500 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி

சேலம்: கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 500 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெறுவதற்கான வங்கிப் பற்று அட்டைகளை சேலம், அழகாபுரத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 500 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெறுவதற்கான வங்கிப் பற்று அட்டைகளை இன்று (27.09.2023) சேலம், அழகாபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கினார். இந்நிகழ்வு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: “பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000- வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வங்கிப் பற்று அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது.

இன்றைய தினம் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியின் வாயிலாக 500 மகளிருக்கு வங்கிப் பற்று அட்டைகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 1.06 கோடி மகளிர் பயன்பெற்றுள்ளனர். இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 5.17 இலட்சம் மகளிர் பயன்பெற்றுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் சென்னைக்கு அடுத்து அதிகளவிலான மகளிர் சேலம் மாவட்டத்தில் பயன்பெற்றுள்ளனர்.

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ள இந்த முற்போக்குத் திட்டத்தினை இந்திய ஒன்றியமே வியந்து பாராட்டுகிறது. மிகக் குறுகிய நாட்களில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு 1.06 கோடி மகளிருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் 500 மகளிருக்கு வழங்கப்படும் வங்கிப் பற்று அட்டைகள் பணத்தை மட்டுமே எடுப்பதற்கான கார்டுகள் அல்ல, தங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் துருப்புச் சீட்டுகளாகும். இத்திட்டம் கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் செயல்படுத்தும் வகையில் முன்னோடித் திட்டமாக அமைந்துள்ளது.

பெண்ணுரிமை குறித்து தந்தை பெரியார் அவர்கள் கண்ட கனவுகளுக்கு தமிழ்நாடு அரசு செயல்வடிவம் கொடுத்து வருகிறது. பெண்களின் முன்னேற்றமானது கலாச்சார ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தடுக்கப்பட்டுள்ளதால், இந்த மூன்று தடைகளையும் நீக்கினால் பெண்கள் சுதந்திரமாக வாழமுடியும் என்று தந்தை பெரியார் கூறினார்கள்.

கலாச்சார ரீதியான தடைகளாக பணக்காரன், ஏழை, மேல் சாதி, கீழ் சாதி, முதலாளி, தொழிலாளி அடிமைத்தனத்தை விட ஆண், பெண் அடிமைத்தனம் கொடுமையானது என்று தந்தை பெரியார் அவர்கள் கூறினார். ஒரு காலத்தில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கும், படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்கும் அனுமதி இல்லாமல் குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கு மட்டுமே இருந்தது. இவற்றை உடைத்து பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து வருகிறோம்.

மேலும், தந்தை மற்றும் பாட்டனார் சொத்தில் பெண்களுக்கு உரிமை இல்லாமல் இருந்த நிலையை மாற்றி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சட்ட ரீதியாக தந்தை சொத்தில் பெண்களுக்கு உரிமை உண்டு என்று சட்டத்தை நிறைவேற்றி பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பெற்றுத் தந்தார்கள்.

அதேபோல், பொருளாதார ரீதியாக பெண் சிறுமியாக இருக்கும்போது தாய் தந்தையையும், வளர்ந்த பின் தனது கணவரையும், வயது முதிர்ந்த காலத்தில் மகன், பேரன் ஆகியோரையும் சார்ந்து இருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இவற்றை நீக்கும் வகையில், புதுமைப் பெண் திட்டம், கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்களால் பெண்களின் சிரமம் குறைக்கப்பட்டுள்ளது.

இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் முத்தாய்ப்பான திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் திகழ்ந்து வருகிறது. பெண்களின் உழைப்பிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்த அங்கீகாரமே இந்தக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். இதனை உங்கள் சகோதரனாக பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். இதன்மூலம் பெண்கள் கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் உயர முடியும்.

பெண்கள் அதிகளவில் படித்து, முற்போக்காகவும், பகுத்தறிவோடும் சிந்தித்து, சுதந்திரமாக செயல்பட வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் கூறியது போல் ஒரு தகவலின் உண்மைத்தன்மையை அறிந்து செயல்பட வேண்டும். பொதுவாழ்வில் பெண்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் ஊரக மற்றும் நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 50 % இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

பொருளாதாரத்தில் பெண்கள் வளர்வது நமது வீட்டிற்கும், சமுதாயத்திற்கும் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் மிகப்பெரிய பலனைத் தருவதோடு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது ஒவ்வொரு வீட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் பெரிய தூண்டுகோளாக அமையும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர். பார்த்திபன் (சேலம்), நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன். கௌதம் சிகாமணி (கள்ளக்குறிச்சி), சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.இராஜேந்திரன் (சேலம் வடக்கு), இரா.அருள் (சேலம் மேற்கு), எஸ். சதாசிவம் (மேட்டூர்), சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அரசுச் செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், மாநகராட்சி துணை மேயர் மா. சாரதாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் 500 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.

Related Stories: