தஞ்சாவூரில் மாயமான மூன்று சிறுமிகள் 24 மணி நேரத்தில் மீட்பு

தஞ்சாவூர், செப். 27: தஞ்சாவூர், ரெட்டிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் வீரமணி (42). இவர் அதே பகுதியில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். வீரமணிக்கு 6 குழந்தைகள். இவரது மகள்கள் மூன்று பேர் நேற்று முன்தினம் குப்பை கொட்ட சென்றவர்கள், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் மூன்று பேரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து சிறுமிகளின் தந்தை வீரமணி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். இந்நிலையில், சென்னையில் வசிக்கும் சிறுமிகளின் தாய் வழி சகோதரர் செல்வராகவன் என்பவர் தொடர்புகொண்டு சிறுமிகள் தன்னை பார்க்க பேருந்தில் வந்துகொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இத்தகவலை சிறுமிகளின் தாயார் போலீசாரிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து உதவி ஆய்வாளர் செல்வராஜ், போலீஸ் ஏட்டு சிவக்குமார் ஆகியோர் மூன்று சிறுமிகளையும் மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், சிறுமிகளின் தாய் பூமாலை படிக்கவில்லை, வேலை செய்யவில்லை என கூறி, அடிக்கடி கண்டித்ததால் மனம் உடைந்து கோபித்துக்கொண்டு சென்னைக்கு சென்றதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் மூன்று சிறுமிகளுக்கும் அறிவுரை கூறி, பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.

The post தஞ்சாவூரில் மாயமான மூன்று சிறுமிகள் 24 மணி நேரத்தில் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: