13 ஒன்றியத்தில் விரைவு மீட்புக்குழு அமைப்பு

புதுக்கோட்டை, செப்.27: வட கிழக்கு பருவ மழையை முன்னிட்டு கால்நடைகளை பாதுகாக்க 13 ஒன்றியத்தில் விரைவு மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 130 பொறுப்பாளர்கள் ஒன்றியம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது ஏற்படவுள்ள வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை நேரங்களில் மரத்தின் அடியிலோ, மின் கம்பங்களின் அடியிலோ, வெட்ட வெளியிலோ கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம். தாழ்வான பகுதிகளில் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளை அணுகி சிகிச்சைகள் மேற்கொள்ளலாம். மேலும், கால்நடை மருத்துவர் செயலியை தங்களுடைய தொடுதிரை அலைபேசியில் ஆண்ராய்டு தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவர் குறித்த விபரங்களை அறிந்து தங்கள் தேவைக்கேற்ப தொடர்பு கொள்ளலாம்.

கால்நடைகள் இறந்தவுடன் அதன் விபரத்தை கிராம நிர்வாக அலுவலர் மூலம் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் தகவல் தெரிவித்து பிரேத பரிசோதனை செய்து அறிக்கையை தாசில்தாரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் உள்ள இலவச கால்நடை அவசர ஊர்தியின் எண்.1962-ஐ தொடர்பு கொண்டு அவசர இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளவும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் விரைவு மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவு மீட்புக் குழுக்களில் உதவி இயக்குநர், கால்நடை மருத்துவர் தலைமையில் ஒரு குழுவிற்கு ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் வீதம் 13 ஒன்றியத்திற்கும் 75 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் இடங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு வேண்டிய தடுப்பு நடவடிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட கட்டுப்பாட்டில் உள்ள 13 ஒன்றியத்திலுள்ள கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் 130 பொறுப்பாளர்கள் ஒன்றியம் வாரியாக நியமனம் செய்யப்பட்டு, பொதுமக்கள் அறியும் வண்ணம் கால்நடை மருந்தகங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போடவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கால்நடைகளில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ள ஏதுவாக உரிய தடுப்பூசி மருந்துகள் மற்றும் அவசர சிகிச்சைக்கான மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளது. புதுகை மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படி மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனங்கள் உள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றை அவசர காலத்தில் தேவைப்படும் இடங்களுக்கு உடனுக்குடன் கொண்டு செல்ல தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 கால்நடை தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏதும் ஏற்படாத வண்ணம் தேவையான உலர் தீவனம் மற்றும் பசுந்தீவனம் மாவட்ட கால்நடை பண்ணையில் போதுமான அளவு இருப்பில் உள்ளது. அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்களின் விபரம், மண்டல இணை இயக்குநர் 9445001218, உதவி இயக்குநர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு புதுக்கோட்டை 9842475386, உதவி இயக்குநர் புதுக்கோட்டை 9842475386, உதவி இயக்குநர் அறந்தாங்கி 9443391025, உதவி இயக்குநர் இலுப்பூர் 9443391025 ஆகும். இந்த தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா, தெரிவித்துள்ளார்.

The post 13 ஒன்றியத்தில் விரைவு மீட்புக்குழு அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: