ராஜ்கோட்டில் இன்று கடைசி ஒருநாள் ஹாட்ரிக் வெற்றியுடன் ஆஸி.யை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

ராஜ்கோட்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. உலக கோப்பைக்கு முன்னதாகவே இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடந்த முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 2வது ஆட்டத்தில் 99 ரன் வித்தியாசத்திலும் வென்ற இந்தியா, 2-0 என முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்டது.

இந்நிலையில், 3வது போட்டி இன்று நடக்கிறது. உலக கோப்பையிலும் இந்த அணிகளே தங்களின் முதல் போட்டியில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது (அக்.8, சென்னை). ஒருநாள் போட்டித் தொடர்களில் இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்ததில்லை என்ற நிலையில், இன்று ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை முழுமையாகக் கைப்பற்றி சாதனை படைக்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.

கேப்டன் ரோகித், கோஹ்லி, குல்தீப் அணிக்கு திரும்பும் நிலையில்… கில், ஹர்திக், ஷர்துல், அக்சர், ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஆஸி. அணியில் கேப்டன் கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஸ்டார்க் இடம் பெற உள்ளதால், ஆறுதல் வெற்றிக்காக முழு பலத்துடன் வரிந்துகட்டுகிறது. உலக கோப்பைக்கான அணியை இறுதி செய்ய நாளையே கடைசி என்பதால், இப்போட்டியில் வெல்ல இரு அணிகளுமே கூடுதல் கவனம் செலுத்துகின்றன. ராஜ்கோட்டில் இரு அணிகளும் மோதிய ஒரே ஒருநாள் போட்டியில் இந்தியாவே வென்றுள்ளது (36 ரன் வித்தியாசம், 2020).

The post ராஜ்கோட்டில் இன்று கடைசி ஒருநாள் ஹாட்ரிக் வெற்றியுடன் ஆஸி.யை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா? appeared first on Dinakaran.

Related Stories: